Published : 25 Apr 2017 04:12 PM
Last Updated : 25 Apr 2017 04:12 PM

மோடியின் பினாமி முதல்வர் என்ற அவதாரத்தை அடையாளம் காட்டியுள்ளார்: எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி

தன்னை மோடியின் பினாமி முதல்வர் என்ற அவதாரத்தை எடப்பாடி பழனிசாமி அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நிதி அயோக் கூட்டத்தில் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி பேசியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தவறான தகவலை தமிழக மக்களுக்கும், எனக்கும் பதிலறிக்கை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

இந்தி திணிப்பை தினசரி நடவடிக்கையாக மத்தியில் உள்ள பாஜக அரசு செய்து கொண்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்துவிட்டு, தமிழையும் புறக்கணித்து விட்டு, இந்திக்கு தமிழகத்தில் உள்ள மைல்கள்களிலேயே முதலிடம் கொடுத்து எழுதியது மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை.

இவற்றை சுட்டிக்காட்ட தைரியமில்லாத முதல்வர் எனக்கு பதில் அளிக்கும் அறிக்கையில் கூட பிரதமர் மோடியைப் பாராட்டி, தன்னை மோடியின் பினாமி முதல்வர் என்ற அவதாரத்தை அடையாளம் காட்டியுள்ளார். அவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள பிரதமரை பாராட்டுவதில் நான் குறுக்கிடவில்லை. ஆனால் இந்தியை கடுமையாக தமிழக மக்கள் மீது திணிக்கும் அரசுக்கு பொறுப்பேற்றிருக்கும் பிரதமரை தமிழின் மீது பாசம் உள்ளவர் என்று தமிழக மக்களுக்கு தெரிவிக்க முதல்வர் முனைவதுதான் வியப்பாக இருக்கிறது.

முதல்வரின் பதிலறிக்கையைப் பார்த்தால் அது அவர் எழுதியதா அல்லது பாஜகவினர் யாராவது எழுதிய அறிக்கையை முதல்வர் படித்துப் பார்க்காமலேயே வெளியிடுகிறாரா என்ற சந்தேகமே வருமளவிற்கு அந்த அறிக்கையில் பிரதமரை மனமுவந்து பாராட்டியிருக்கிறரார்.

தனக்குப் போட்டியாக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட நான் தான் பிரதமரின் முதன்மையான ரசிகன் என்பதை எனக்கு அளித்த பதிலறிக்கை வாயிலாக தெரிவித்து, தமிழக மக்கள் மத்தியில் தான் யாருடைய ஆதரவில் பதவியில் நீடிக்கிறேன் என்று விளக்கியதற்கு முதல்வருக்கு நன்றி.

அதிமுகவில் நடக்கும் இணைப்புப் போட்டியில், தான் யாருடைய ஆதரவாளராக இருக்கிறேன் என்பதை முதல்வர் பதவிக்குப் போட்டி போடுவோருக்கு தெரிவிக்க இந்த பதிலறிக்கை பயன்படுமே தவிர, எனது குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் அறிக்கையாக எனக்குத் தோன்றவில்லை.

நிதி அயோக் கூட்டத்தில் உள்ள விவாதப் பொருள்கள் அடிப்படையில் பேசினேன் என்கிறார் முதல்வர். அப்படியென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறீர்களே, அது நிதி அயோக் கூட்ட விவாதப் பொருளில் இடம்பெற்றிருந்ததா?

தமிழகத்தின் தொலை நோக்குத் திட்டம் 2023 அடிப்படையில் இந்தியாவின் தொலைநோக்குத் திட்டம் 2030யை தயாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே, அது கூட்டத்தின் விவாதப் பொருளில் இடம்பெற்றிருந்ததா? ஆகவே விவாதப் பொருளில் இல்லை என்று கூறி, தான் பேச மறந்ததை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர்.

காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஒப்புக்குப் பேசிய நீங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஏன் நிதி அயோக் கூட்டத்தில் பேசவில்லை? ஏனென்றால் கடன் தள்ளுபடி பற்றி பேசினால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என்பது தெரியும். ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி பேசினால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என்பது தெரியும். அதனால்தான் மறைந்த ஜெயலலிதா காலத்திலிருந்து கேட்டும் இதுவரை மத்திய அரசு தீர்வு காணாத பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசி விட்டு, மாநில உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல், மாநிலத்தில் உள்ள 5 லட்சம் கோடி கடன் பற்றி வாய் திறக்காமல் திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நதிநீர் இணைப்பு பற்றி பேசும்போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் பற்றி பேச ஏன் மனம் வரவில்லை? நிதி அயோக் கூட்டத்தில் இருந்த எந்த விவாதப் பொருள் அதை தடுத்தது? என்பதை முதல்வர் தெளிவாக விளக்க வேண்டும்.

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ் 15 லட்சம் கோடி மதிப்பில் 217 திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பதிலறிக்கையில் முதல்வர் கூறியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது ஒரேயொரு கேள்விதான். இந்த தொலைநோக்குத் திட்டம் 24.3.2012ல் வெளியிடப்பட்டது. ஐந்து வருடங்கள் முடிந்து விட்டது. தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள 217 திட்டங்களில் ஒரு திட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வரால் துணிச்சலுடன் சொல்ல முடியுமா?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டீர்கள். இன்றைக்கு அந்த தொழிற்சாலைகள், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக தமிழகத்திற்கு வந்துவிட்டன என்று உறுதியாக உங்களால் கூற முடியுமா? ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா தமிழகத்தில் நிலவும் மோசமான அரசியல் நிலையற்ற தன்மையால், ஆந்திராவில் 10,300 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை அமைக்கப் போகிறது என்பதாவது குறைந்தபட்சம் முதல்வருக்குத் தெரியுமா?

இப்படி எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், எந்த புதிய தொழிற்சாலைகளையும் திறக்காமல் தொலை நோக்குத் திட்டம் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டுவது ஏன் என்று நான் முதல்வரைக் கேட்க விரும்புகிறேன்.

திமுக ஆட்சியில் தொலை நோக்குத் திட்டம் இல்லை என்கிறார் முதல்வர். சென்னை அம்பத்தூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும் புதிய தொழிற்சாலைகள் அடுக்கடுக்காக வந்தது திமுக ஆட்சியில் தான். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், மீஞ்சூர், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

தாமிரபரணி- நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற தொலைநோக்குத் திட்டமும் தலைவர் கருணாநிதி தலைமையில் தான் துவங்கி பணிகள் தொடர்ந்தது. தென் மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேது சமுத்திரத் திட்டத்தை துவக்கி வைத்தது திமுக ஆட்சி தான். ஏன் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் என எல்லாமே திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஏனோ முதல்வர் மறந்து விட்டு திமுக மீது போகிற போக்கில் புழுதி வாரி இறைத்துள்ளார்.

அதிமுக போல் பகட்டு அறிவிப்புகளை செய்வதில் திமுகவிற்கு என்றைக்கும் உடன்பாடு இருந்ததில்லை. கற்பனை திட்டம், கனவுத் திட்டம் எல்லாம் அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பாகவும், தொலை நோக்குத் திட்டம் 2023 ஆகவும், தேர்தல் வாக்குறுதிகளாகவும் தான் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஆனால் திமுகவைப் பொறுத்தமட்டில் சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்று சிறப்பாக ஆட்சி நடத்தி தமிழகத்தை பொருளாதார ரீதியாக, தொழில் வளர்ச்சி ரீதியாக, உட்கட்டமைப்பு ரீதியாக முன்னேற்றிய பெருமை திமுகவுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக தலைவர் கருணாநிதிக்கு உண்டு என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

விவசாயிகள் டெல்லியில் போராடினார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்பு நடத்துகின்றன. இதுபோன்ற வேளையில் டெல்லியில் நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி பேசி, அனைத்து மாநில முதல்வர்களின் கருத்தையும் திரட்டியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதை சுட்டிக்காட்டினால், பிரதமர் தமிழ் பற்றி பெருமையாக பேசினார் என்று பதிலறிக்கை விடுகிறார்.

ஒரு வாதத்திற்கு தமிழ் பற்றி பிரதமர் நிதி அயோக் கூட்டத்தில் பெருமையாக பேசினார் என்றால், உடனே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குங்கள் என்று ஏன் அந்தக் கூட்டத்திலேயே முதல்வர் வேண்டுகோள் விடுக்கவில்லை?

பிரதமரே உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை முதல்வர் கோட்டை விட்டது ஏன்? ஆகவே நான் திரும்பவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன், தமிழகம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி வலுவான கருத்தை நிதி அயோக் கூட்டத்தில் எடுத்து வைத்து, பிரதமரிடம் நிவாரணம் கோரத் தவறி விட்டார் முதல்வர் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

தமிழக மக்கள் என்ன கஷ்டம் பட்டால் என்ன? விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டால் என்ன? நான் மத்திய அரசு கோபித்துக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருக்கிறார் என்பது தான், இப்போது எனக்கு அவர் வெளியிட்டுள்ள பதிலறிக்கையிலும் தெரிய வந்துள்ளது.

அதனால் தான் நான் திரும்பத் திரும்ப மோடியின் பினாமி அரசு என்று அதிமுக அரசை கூறி வருகிறேன். அதை இல்லை என்று மறுக்கும் நடவடிக்கைகள் எதையும் இதுவரை முதல்வர் எடுக்கவில்லை. நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதும் வெளிப்படுத்தவில்லை என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை முதல்வர் உணர வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x