Published : 19 Feb 2017 06:55 PM
Last Updated : 19 Feb 2017 06:55 PM

மெரினாவில் போராட்டம் நடத்திய ஸ்டாலின் உட்பட 2000 பேர் மீது வழக்குப் பதிவு

மெரினாவில் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 2 ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளில் மெரினா போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவரின் உத்தரவின்பேரில் திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். ஆளுநரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்கம் தந்த உடன், சனிக்கிழமை மாலை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஸ்டாலின் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் பரவியதும் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை அருகே திரண்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து தனித்தனியாக 4 பகுதிகளில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்நிலையில், மு.க ஸ்டாலின் உள்பட போராட்டத்தில் கலந்து கொண்ட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரினா போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சந்தேக வழக்கு என 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''அதிமுக அரசு தொடுத்த வழக்குகளை சந்திக்க நாங்கள் எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கிறோம். நேற்றைக்கு சட்டப்பேரவையில் நடைபெற்று இருக்கக் கூடிய ஜனநாயக படுகொலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மிக விரைவில் நாங்கள் வழக்கு போட இருக்கின்றோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x