Published : 23 Jan 2017 05:53 PM
Last Updated : 23 Jan 2017 05:53 PM

மெரினா போராட்டக் களத்தின் கடைசி நிமிடங்கள்: லாரன்ஸ் விளக்கம்

மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வருத்தமாக உள்ளது என்று மெரினா போராட்டக் களத்தின் கடைசி நிமிடங்களை லாரன்ஸ் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பாக சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

''பாரம்பரிய விளையாட்டை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் போராட்டத்துக்கான முக்கிய நோக்கம். இந்தப் போராட்டத்துக்கு மாணவர்கள் மிகப் பெரிய அளவில் ஆதரவு அளித்தனர்.

மாணவர்களின் இந்த ஆதரவு உலக அளவில் பேச வைத்தது. மாணவர்கள் கலந்துகொண்ட பின்பு அவர்களது பெற்றோர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. போராட்டத்துக்கான ஆதரவு, அதிகரிக்க அதிகரிக்க நிச்சயம் ஜல்லிக்கட்டும் நடைபெறும் என்ற நம்பிக்கையும் உருவானது.

நம்முடைய முக்கிய கோரிக்கை என்ன? ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதுதானே.. அதற்கு முதல்படியாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு நமது அரசசாங்கத்துக்கு நமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம். வன்முறையில் ஈடுபடுவது போராட்டத்தின் நோக்கம் அல்ல.

கடந்த ஏழு நாட்களாக நான் இங்கு இருக்கிறேன். மாணவர்களிடம் இந்தப் போராட்டம் இருக்கும்வரை பிரமாதமாக போய் கொண்டிருந்தது. ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே மாணவர்கள் கஷ்டப்பட்டு போராடினர். மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஜல்லிக்கட்டுக்காகவே தொடர்ந்து போராடினர். அரசாங்கத்திடமும் இதையே வலியுறுத்தினோம்.

அரசாங்கம் நம் போராட்டத்தின் வலிமையை உணர்ந்தவுடனே மத்திய அரசை அணுகினர். அதன்பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வந்துவிட்டோம் என்று சொன்னார்கள்.

சொன்னவுடம் ஒத்துக் கொண்டோமா? மாணவர்கள் ஒத்துக் கொண்டார்களா? எங்களுக்கு அவசர சட்டம் எல்லாம் வேண்டாம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்திவிட்டு, அடுத்தவருடம் ஜல்லிக்கட்டை பார்க்க முடியாமல் எங்களால் இருக்க முடியாது. என் குழந்தை, பேரன் என அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரும் ஜல்லிக்கட்டை பார்க்கும்வரை இந்தக் கூட்டம் கலையாது என்று சொன்னோம் இதுதான் நேற்றிரவுவரை இருந்தது.

மாணவர்களிடத்தில் போராட்டம் இருக்கும்வரை போராட்டத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. திடீரென்று சம்பந்தமே இல்லாமல் வேறொன்றைத் திணிக்க ஆரம்பித்தார்கள் போராட்டத்தின் உள்ளே. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்தோம். நமக்கு தேவை ஜல்லிக்கட்டு. அதுதான் மாணவர்கள் மற்றும் தமிழக மக்களின் ஆசையும்கூட.

நேற்றிரவு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்குச் சென்றேன். எனினும். என் மனசெல்லாம் இங்கேதான் இருந்தது மாணவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருகிறார்களோ என்று.

இன்று காலை 6 மணிக்கு நான் எழுந்திருக்கிறேன். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஓடுகிறார்கள். பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உடனே நான் மருத்துவமனையிலிருந்து வண்டியை எடுக்கச் சொல்லி கிளம்பினேன். வரும் வழியிலேயே என் அம்மா என்னை செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் நான் சென்றேன்.

ஆனால் என்னை மெரினாவுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்தக் கலவரம், பிரச்சினைகளை எல்லாம் மாணவர்கள் செய்ய மாட்டார்கள். மாணவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியும். வேறு அமைப்புகள்தான் உள்ளே சேர்ந்து மாணவர்களின் பெயரை சொல்லி கலவரங்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டேன் இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கூறினேன். ஆளுநரே அவசர சட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டார் நிரந்தர தீர்வு வந்துவிட்டது என்று கூறினர்.

எனக்கு மிகுந்த மிகிழ்ச்சியாகவும் இருந்தது. இதனை மாணவர்களிடத்தில் புரிய வைக்கலாம் என்று கேட்டதற்கு, அப்போது உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. மெரினாவில் ஏழு நாட்கள் நாம் கஷ்டப்பட்டோம். இப்போது நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது இதனை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எல்லோரையும் வரச் சொல்லி சந்தோஷமாக கொண்டாட வேண்டிய தருணத்தில் இப்படி கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதை கண்டு மாணவர்களிடத்தில் இதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன்.

கடந்த இரண்டு மணி நேரமாக நானும் போராடினேன் ஆனால் முடியவில்லை. அதன்பிறகு எப்படியோ நான் உள்ளே வந்து சேர்ந்துவிட்டேன். நிரந்தரத் தீர்வு வந்துவிட்டது. நாம் வெற்றி பெற்றுவிட்டோம். இதனை மகிழ்ச்சியாக மாணவர்களிடம் கூறி, கொண்டாடுவதற்கு கேக் எல்லாம் ஆர்டர் செய்தார்கள்.

நான் மாணவர்களிடத்தில் இதனைப் பற்றி விளக்கும்போது அவர்கள் அதை கவனமாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சிலர் சம்பந்தமே இல்லாமல் எழுந்து குரல் எழுப்பினர். இது வேண்டும்! அது வேண்டும் என்று குரல் எழுப்பினர். அவ்வாறு குரல் எழுப்பியது மாணவர்கள் அல்ல.

மாணவர்களிடத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து இதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கூறினேன்.

இங்கு போரட்டத்தில் கூடிய அனைவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அவர்கள் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும். நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகும் தொடர்வது தவறான பாதையாகும்.

மாணவர்கள் ஆளுநர் கையெழுத்திட்ட ஆவணத்தைக் கேட்டனர். ஆனால் எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்து இல்லை. எங்களுக்கு கிடைத்த வெற்றியை இன்று கொண்டாட நினைத்ததே எங்களது நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வருத்தமாக உள்ளது'' என்று லாரன்ஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x