Published : 07 Jun 2014 03:19 PM
Last Updated : 07 Jun 2014 03:19 PM

1009 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டியது - கூடங்குளம் முதலாவது அணு உலை சாதனை

கூடங்குளம் முதலாவது அணு உலையில், சனிக்கிழமை பகல் 1.18 மணிக்கு முழு உற்பத்தி அளவான 1,000 மெகாவாட்டையும் தாண்டி, 1,009 மெகாவாட் மின் உற்பத்தி செய்து தேசிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அணு மின்சாரத்தின் பங்களிப்பு 4,780 மெகாவாட்டிலிருந்து, 5,780 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அணு உலை, 2013 அக்டோபர் 22-ம் தேதி முதன்முதலாக 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப் பட்டது. 2013 ஆகஸ்ட் 14-ம் தேதி 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. 2014 ஜனவரி 26-ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 750 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் முன்பு அணுஉலை மற்றும் டர்பைன் ஆகியவை நிறுத்தப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2014 மார்ச்சில், 750 மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டது.

1,000 மெகாவாட் சாதனை

கடந்த ஏப்ரல் 28, 29 மற்றும் 30-ம் தேதிகளில், அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரிய அதிகாரிகள் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஆய்வு மேற்கொண்டு, 90 சதவீதம் மின் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த 4 நாட்களில் 900 மெகாவாட் மின்உற்பத்தி எட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளுக்குப்பின் சனிக்கிழமை பகல் 1.18 மணிக்கு முதலாவது அணு உலை தனது முழு உற்பத்தி அளவான 1,000 மெகாவாட்டையும் தாண்டி, 1,009 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

இதுகுறித்து அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது:

கூடங்குளம் முதலாவது அணுஉலையின் கட்டமைப்புகள், செயல்பாடுகள் குறித்த அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, கண்காணிப்பு குழு, பாதுகாப்பு மறு ஆய்வு குழு, ரஷ்ய விஞ்ஞானிகளின் இறுதி ஒப்புதலுடன் 100 சதவீத மின் உற்பத்தி எட்டப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பானது

சர்வதேச தரத்துடன், பாதுகாப்பு மிக்கதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலையில் இருந்து மட்டும் 1,900 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும். பின்னர் படிப்படி யாக மின் உற்பத்தி அளவு குறைக் கப்பட்டு, இறுதிகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வு அறிக்கை அணுசக்தி ஒழுங் கமைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டு, வாரியத்தின் ஒப்புதலுடன் மீண்டும் முழு அளவில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு சுந்தர் கூறினார்.

உற்பத்தியில் ‘மெகா’ சாதனை

கூடங்குளம் முதலாவது அணுஉலை மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியிருந்ததே ஒரு சாதனை அளவாக இருந்தது. தாராபூர் உள்பட நாட்டிலுள்ள அணுஉலைகளில் இதுவரை உச்சபட்ச அளவாக 540 மெகாவாட் மின் உற்பத்தியே நடைபெற்றிருக்கிறது. இந்நிலை யில், தனியாக ஒரு அணுஉலையில், 1,000 மெகாவாட் உற்பத்தி என்பது மற்றுமொரு மெகா சாதனையாகும். இதன்மூலம் நாட்டில் அணு மின்சாரத்தின் பங்களிப்பு 4,780 மெகாவாட்டிலிருந்து, 5,780 மெகாவாட்டாக அதிகரித்தி ருக்கிறது. கூடங்குளம் அணுமின் திட்டம் யூனிட்-1 தேசிய மின்வாரியத்தில் இணைக்கப்பட்ட இந்திய அணுமின் கழகத்தின் 21-வது அணுமின் நிலையம் ஆகும்.

சாதனையை எட்ட கடந்து வந்த பாதை

1988: இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் ரூ. 13,500 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டது.

2013 அக்டோபர் 22: முதன்முதலாக 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

2014 ஜனவரி 26: மின் உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியது.

மார்ச்: 750 மெகாவாட் மின் உற்பத்தி.

மே: 900 மெகாவாட் மின் உற்பத்தி.

ஜூன் 7 பகல் 1.18 மணி: 1,009 மெகாவாட்டை எட்டி சாதனை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x