Published : 10 Dec 2016 06:11 PM
Last Updated : 10 Dec 2016 06:11 PM

முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி காலமானார்

கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.

கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1929-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி குழந்தைசாமி பிறந்தவர் வா.செ.குழந்தைசாமி. காரக்பூரிலுள்ள ஐஐடி-யில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்படிப்பை பயின்றார். இல்லியனாஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு 'குழந்தைசாமி மாதிரியம்' எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1981-90ஆம் ஆண்டு வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-79ஆம் ஆண்டிலும் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி சாகித்ய அகாடமி விருதும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கவுரவ முனைவர் பட்டம் அளித்து கவுரவித்தது. 'குலோத்துங்கன்' என்ற புனைபெயரில் இவர் எழுதிய மரபுக் கவிதைகள் இலக்கியவாதிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.

வா.செ.குழந்தைசாமி பெசன்ட் நகரில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x