Published : 01 Aug 2014 03:00 PM
Last Updated : 01 Aug 2014 03:00 PM

முதல்வர் அவமதிப்பு: இலங்கை துணை தூதரக அதிகாரியிடம் ஆட்சேபித்ததாக ஞானதேசிகன் தகவல்

தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அதிகாரியையும் தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில்; இணையதள உபயோகிபப்பாளர் ஒருவர்; தமிழக முதலமைச்சர், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மீனவர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி ஊடக நண்பர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அதிகாரியை தொடர்பு கொண்டு இதுபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைக் குறித்து கொச்சையான கருத்துகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவந்திருப்பது ஆட்சேபத்திற்கு உரியது என்று சொன்னேன். அவரும் இந்த கருத்து அதிகாரப்பூர்வ கருத்தல்ல என்றும், இணைய தளத்தில் இருந்து அதனை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்.

அரசியல் மாச்சர்யங்கள், கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முட்டுக்கட்டை போடும் இலங்கை அரசு இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு இதுவரை தீர்வு காண முடியாமல் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இதுபோனற் நச்சு; கருத்துகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில தனியார் ஒருவர் வெளியிடுவதை தடுக்காமல் இருந்தது விஷமத்தனமானது.

இதுபோன்ற கருத்துகளை இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டுமெனவும், இக்கருத்துகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x