Published : 23 Jan 2017 09:59 AM
Last Updated : 23 Jan 2017 09:59 AM

மாணவர் போராட்டத்தை காவல்துறை மூலம் தீர்க்க நினைப்பது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தைக் காவல்துறை மூலம் தீர்க்க நினைப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் மக்கள் போராட்டத்தை அதிமுக அரசு முறையாக கையாளத் தவறி விட்டது. மாணவர்கள், இளைஞர்கள், கைக் குழந்தைகளுடன் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கும் தமிழுணர்வு ரிதீயான போராட்டங்களை காவல்துறை மூலம் மட்டுமே தீர்த்து வைத்து விட முடியும் என்று அதிமுக அரசு நினைப்பது முற்றிலும் தவறானது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான போராட்டத்தை திரும்பப் பெற வைப்பதை விட்டு விட்டு, காவல்துறை மூலம் இந்த பணியை செய்ய வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத போக்கு மட்டுமல்ல- சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அணுகுமுறை.

ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இளைஞர்களை சந்தித்துப் பேச வேண்டுகோள் விடுத்தேன். பிறகு முதலமைச்சர் டெல்லிக்கு பிரதமரை சந்திக்கச் சென்ற போது "மாணவர்கள், இளைஞர்கள் பிரநிதிநிதிகளை அழைத்து செல்லுங்கள்" என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு கூட உடனடியாக மெரினா கடற்கரை சென்று போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றும், நிரந்தர தீர்வுக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

ஆனால் இந்த வழிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் "நானே ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைக்கிறேன்" என்று மதுரைக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றதும், தன் அமைச்சரவை சகாக்களை எல்லாம் ஆங்காங்கே உள்ள மாவட்டங்களில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கூட செய்யாமல் ஜல்லிக்கட்டை அவசர கோலத்தில் நடத்த வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்ததும் இன்று மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தொடருவதற்கு காரணமாகி விட்டது. அதை விட "காவல்துறையை பயன்படுத்தியே போராட்டத்தை கலைப்பேன். போராடும் மாணவர்களை சந்திக்கவே மாட்டேன்" என்று ஒரு முதலமைச்சர் செயல்படுவதை ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. முதலமைச்சர் இப்படி அடம்பிடித்தது அறப்போரில் ஈடுபட்டு அமைதி வழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் பண்பாடு காப்பாற்றும் போராட்டத்தை அவமதிப்பதாக அமைந்து விட்டது.

ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்து மெரினாவில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களும், இளைஞர்களும் மேலும் இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள் கொடுங்கள் என்று கேட்டும், அவர்களை தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாகவும் கலைக்க காவல்துறையை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எடுக்க உத்தரவிட்டார்? கடல் நீரில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று முன்னெச்சரிக்கை உணர்வு கூட மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு வராமல் போனது ஏன்? இப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அரசு நிர்வாகத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் இருப்பது கவலையளிக்கிறது.

கடற்கரையோரத்தில் நடைபெறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த நாட்டின் எதிர்காலங்களாக திகழும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர் மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து காவல்துறையும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த நிலையிலாவது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக மெரினா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் நேரில் சந்தித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கிக் கூறி ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடை பட விடமாட்டோம் என்ற உறுதியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x