Published : 03 Jul 2014 11:43 AM
Last Updated : 03 Jul 2014 11:43 AM

மவுலிவாக்கம் பலி 60 ஆக அதிகரிப்பு: இன்னும் 25 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது.

கடுமையானது துர்நாற்றம்

கட்டிட விபத்து நிகழ்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்துள்ள நிலையில், அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் கடுமையாக வீசத் தொடங்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நிகழ்விடத்தைச் சுற்றிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மவுலிவாக்கம் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதிபதி சு.ரகுபதி தலைமையில் >ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வரை ஒரு குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சடலமாகவும் உயிருடனும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80- க்கும் மேலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அரசு வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர், இன்னும் 25 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் மொத்தம் 72 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 60 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி இன்னும் முடிவடையாததால் மேலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என தெரியாமல் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தைகளும் உடன் இருந்ததாக கூறுகின்றனர். சனிக்கிழமை வேலைக்கு வராதவர்களும் மாலையில் சம்பளம் வாங்குவதற்காக வந்துள்ளனர். மழை பெய்ததால், அனைவரும் கட்டிடத்துக்குள் சென்று நின்றுள்ளனர். அதனால், கட்டிட இடிபாடுகளில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அண்ணனை காணவில்லை, தம்பியைக் காணவில்லை, கணவரை காணவில்லை என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

மீட்புப் பணி முடிவது எப்போது?

மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று டிஐஜி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு டிஐஜி செல்வம் கூறுகையில், "இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்" என்றார்.

கட்டுமான நிறுவன அதிபர் அறிவிப்பு

இதனிடையே, இடிந்து விழுந்த 11 மாடி கட்டி டத்தை கட்டிய மதுரையை சேர்ந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், அவரிடம் வீடு வாங்கியவர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளார். அதில், >பணத்தை திருப்பித் தருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி >தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தையடுத்து, >அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள்?

ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்ற தொழிலாளி அளித்த தகவலின்படி, >இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

கல்லூரி மாணவர் பலியான சோகம்

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான கல்லூரி மாணவர் ஒருவர், >விடுமுறையில் வேலைக்கு வந்தபோது சோக நிகழ்வுக்கு ஆளானார் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெற்றோர் கதறினர்.

உயிர் பிழைத்தவர்கள் பேட்டி

கட்டிட விபத்தில் சிக்கிய தாங்கள் உயிர் பிழைப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று >உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டியை அளித்தனர்.

பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கோரிக்கை

இதனிடையே, மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. அந்த >வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வசித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x