Published : 02 Jul 2014 11:20 AM
Last Updated : 02 Jul 2014 11:20 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பலி 47 ஆக அதிகரிப்பு: மேலும் 25 பேர் சிக்கியிருப்பதாக அச்சம்

சென்னை - மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) மதியம் நிலவரப்படி 47 ஆக அதிகரித்துள்ளது.

43-வது சடலம் மீட்கப்பட்ட நிலையில். மேலும் ஒரு சடலம் இடிபாடுகளுக்கு மத்தியில் கிடப்பதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மீட்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சிங் பான், தன்னுடன் 30 பேர் அதே தளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்ததாக கூறினார். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குறைந்தது 25 பேராவது சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில், மீட்புப் பணிகள் 5-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்தில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் கடந்த 5 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரம் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறும்போது, "கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 28 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள்.

கடந்த சனிக்கிழமை முதல் நடந்து வரும் மீட்புப் பணிகளில் மொத்தம் 69 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடனும், சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும் 25 பேர் சிக்கியிருக்கலாம்?

மீட்புப் பணிகள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டிட இடிபாடுகளில் இன்னும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து மீட்புக் குழுவினர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

ரூ.5 லட்சம் நிதியுதவி:

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில தொழிலாளர் துறை செயலரை தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து ஆலோசிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

3 நாட்களுக்குப் பிறகு 4 உயிருடன் மீட்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து விரிவான செய்தி இது - >3 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு.

'பலர் உயிருடன் உள்ளனர்'

தரைமட்டமான 11 மாடி கட்டிட >'இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உயிருடன் உள்ளனர்' என்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, மீட்புப் பணி வீரர்கள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.

அதேவேளையில், ஒருவர் தண்ணீர் குடிக்காமல், உணவு சாப்பிடாமல் 15 நாட்கள் வரை உயிர் வாழலாம். சுவாசிக்க ஆக்ஸிஜன் மட்டும் இருந்தால் போதும் என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

துர்நாற்றத்தால் அவதி

கட்டிட இடிபாடுகளில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. >மீட்புப் படையினருக்கு மாஸ்க் வழங்கப்பட்டது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யவும் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உதவி செய்யவும் >50 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ உதவி மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த >12 மாடி கட்டிடத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல்> வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x