Published : 26 Oct 2014 07:07 PM
Last Updated : 26 Oct 2014 07:07 PM

மழை நிவாரணப் பணிகள்: முதல்வர் பதவி நிலைத்திட ஓ.பி.எஸ்.ஸுக்கு கருணாநிதி யோசனை

மழை நிவாரணப் பணிகள் துரிதப்படுத்துவதன் மூலம் பதவியை நிலைத்திட வழிவகுக்கலாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், "வட கிழக்குப் பருவம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் பெரு மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரம் சிதறுண்டு, பிழைப்பதற்கான வழிகளனைத்தும் அடைக்கப்பட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் தேம்பிக் கிடக்கிறார்கள்.

சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையினால் தாழ்வான குடியிருப்பு கள், குடிசைப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

பெருமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரிலே மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன. முதல்வரோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஓரிருவரைத் தவிர வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை. நிவாரணப் பணிகளிலும் அக்கறை காட்டவில்லை. அனைவரும் "நேர்த்திக்கடன்" செலுத்துவதிலேதான் நேரத்தைக் கழிக்கிறார்கள்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த பத்து நாட்களாகப் பெய்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பட்டியிலிட்டுள்ள அவர், "தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்றிருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவாவது, ஆட்சியினர் பயத்திலிருந்து விடுபட்டு, உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்துப் பேசி, தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும்.

மத்திய அரசை எதிர் பார்த்துக் காத்திருக்காமல், மாநில அரசின் சார்பில் இதற்காகத் தனியாக சிறப்பு நிதி இருக்கும், நிதித் துறைச் செயலாளரை அழைத்துப் பேசினால், அவர் நிவாரண நிதிக்காக முதற் கட்டமாக அறிவிக்க உதவுவார். ஓரிரண்டு நாட்களில் அந்த நிதியை ஒதுக்கிட ஆவன செய்ய வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக எத்தனை ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சரையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு உடனே அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் வழங்குவதோடு, அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை முடுக்கி விடவேண்டும்.

இக்கட்டான இந்த நேரத்தில் நமது மக்களைக் கைவிட்டு விடக் கூடாது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் "மக்கள் முதல்வர், புரட்சித் தலைவி, அம்மா" அவர்களின் வலியுறுத்தல்படிச் செய்வதாக தவறாமல் அறிவிப்பாக ஏடுகளுக்குப் பன்னீர்செல்வம் "பயப்படாமல்" தரலாம். அப்போதுதான் இருக்கும் பதவி நிலைத்திடக் கூடும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x