Published : 25 Apr 2015 08:18 AM
Last Updated : 25 Apr 2015 08:18 AM

மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவான பிளாஸ்டிக் நாணயங்கள்: இந்தியாவில் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

உற்பத்தி செலவு மற்றும் எடை குறைவான, அதே சமயம் மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவான பிளாஸ்டிக் நாணயங்கள் நம்நாட்டில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பழைய, புதிய நாணயங்கள் சேகரிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டமாற்று முறையில் இருந்த முரண்பாடுகளை தவிர்க் கும் பொருட்டு கி.மு. 7-ம் நூற் றாண்டில் துருக்கி நாட்டினர் தங்கம், வெள்ளி இரண்டும் கலந்த வர்த்தக நாணயங்களை முதலில் அறிமுகம் செய்தனர். நாணயங்களை மொத்தமாக எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில் 9-ம் நூற்றாண்டில் சீனர்கள் காகிதத்தாலான நோட்டுகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து பிரிந்து 1992-ல் தனி குடியரசான டிரான்ஸ்நிஸ்டிரியா நாட்டின் குடியரசு வங்கி முதல் முறையாக மறுசுழற்சி செய்ய ஏதுவான பிளாஸ்டிக் நாணயங் களை வெளியிட்டது. ரஷ்யன் ரூபிலுக்கு இணையான இந்த பிளாஸ்டிக் நாணயம் புறஊதா-அகச்சிவப்பு தொழில்நுட்பத்தில் ஒளி பிரதிபலிப்பு, கட்டளை பாது காப்பு அடங்கிய மைக்ரோ நூலிழையால் தயாரிக்கப்பட்ட தாகும்.

இவை வட்ட வடிவிலான மஞ்சள் பழுப்பு நிறம் கொண்ட ஒரு ரூபில் நாணயம், சதுர வடிவில் பச்சை நிறமுடைய 3 ரூபில் நாணயம், பெண்டகன் வடிவம் கொண்ட நீலநிற 5 ரூபில் நாணயம் மற்றும் சிவப்பு நிறத்தில் அறுகோண வடிவில் 10 ரூபில் நாணயம் உட்பட 4 நாணயங்கள் தற்போது அந்நாட்டில் புழக்கத்தில் உள்ளது.

பல்வேறு உலக நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கிறது. அதே போல நம் நாட்டிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதேபோல பிளாஸ்டிக் நாணயங்களையும் வெளியிட வேண்டும் என்கின்றனர் நாணயங்கள் சேகரிப்போர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட நாணயவியல் கழகத்தின் துணைச் செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:

இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயம் உற்பத்தி செய்ய அதன் மதிப்பைவிட பலமடங்கு செலவாகிறது. டிரான்ஸ்நிஸ்டிரியா அரசு வெளியிட்டுள்ள பிளாஸ்டிக் நாணயங்களைப் பொறுத்தவரை தயாரிப்பு செலவு மற்றும் எடையும் குறைவு.

மேலும், இதைக் கையாள் வது எளிது, மறுசுழற்சி செய்ய ஏற்றது. இதுதவிர ஒவ்வொரு நாணயமும் வட்டம், சதுரம், பெண்டகன், அறுகோணம் என வடிவமைக்கப்பட்டுள்ளதால் பார்வையற்றோரும் எளிதில் பயன்படுத்தலாம்.

கனடா உள்ளிட்ட அயல் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் கரன்சியில் பார்வையற்றோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி எழுத்து மூலம் அதன் மதிப்பு பொறிக்கப்பட்டிருக்கும். அதே போல நம்நாட்டில் பிளாஸ்டிக் கரன்சி அறிமுகம் செய்யும்போது பிரெய்லி எழுத்தைப் பொறிக்க வேண்டும்.

மேலும், மக்கள்தொகையில் உலக அளவில் 2-ம் இடத்தில் இருக்கும் நம்நாட்டில் பணம், நாணயத்தின் பயன்பாடு மிகவும் அதிகம். சிறிய நாடுகளே இது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக் கும்போது, நம்முடைய அரசு பிளாஸ்டிக் நாணயங்களை அறி முகப்படுத்த பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

டிரான்ஸ்நிஸ்டிரியா நாட்டு பிளாஸ்டிக் (ரூபில்) நாணயங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x