Published : 26 Apr 2017 07:31 AM
Last Updated : 26 Apr 2017 07:31 AM

மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் - நல்லகண்ணு வேண்டுகோள்

கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

மருத்துவம் படித்துவிட்டு கிராமப்புறங்களில் மருத்துவ அலுவலர்களாகப் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இது ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 18-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் செய்துவருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, டி.கே.ரங்கராஜன் எம்.பி. கலந்துகொண்டனர்.

நல்லகண்ணு பேசியபோது, ‘‘நாடு முழுவதும் அரசு மருத்துவர் கள்தான் சிறப்பாகப் பணியாற்று கின்றனர். சிறப்பு உயர் சிகிச்சை மருத்துவம் இன்றைய சூழலில் கட்டாயமான ஒன்று. மருத்துவர் களின் கோரிக்கை நியாயமானது. இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்’’ என்றார்.

இப்போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஞானபிரகாசம், செயலாளர் கதிர்வேல், ஒருங்கிணைப்பு செயலாளர் அகிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில செயலாளரும் சென்னை மாவட்ட தலைவருமான பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x