Published : 28 Jan 2015 04:34 PM
Last Updated : 28 Jan 2015 04:34 PM

மனைவி குடும்பத்தினரை கூண்டோடு கொலை செய்தது ஏன்?- மதுரையில் கைதான ராணுவ வீரர் வாக்குமூலம்

நிம்மதியாக வாழ விடாததால் மனைவி குடும்பத்தினரை கூண்டோடு கொலை செய்தேன் என்று ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள அ.தொட்டியபட்டியைச் சேர்ந்த பொன்ராமலிங்கம் மகன் கமலக் கண்ணன் (35). ராணுவ வீரரான இவருக்கும், மங்கள்ரேவு கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கோமதிக்கும் (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், கமலக்கண்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரது ஊரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு மனைவி கோமதி, அவரது தந்தை சின்னச்சாமி (65), தாய் ராமுத்தாயி (55), சகோதரிகள் பாக்கியலெட்சுமி (35), வனரோஜா (23) ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை கமலக்கண்ணன் உள்ளிட்டோர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக கமலக்கண்ணன், அவரது தாய் சுப்புலெட்சுமி, சகோதரர் பரமசுந்தரம், சகோதரி பூர்ணகலா, அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோர் மீது நாகையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களில் வெங்கடேசன், பூர்ணகலா தவிர மற்றவர்களை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய பட்டா கத்தி, துப்பாக்கியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையின்போது போலீஸாரிடம் கமலக்கண்ணன் கூறியதாவது:

திருமணம் ஆன நாள் முதல் எனக்கும், கோமதிக்கும் ஒத்துப்போகவில்லை. பாலுறவு, சொல்பேச்சு கேளாமை, பிடிக்காதவர்களுடன் பழகுவது எனப் பல விஷயங்களில் முரண்பாடு இருந்தது. மேலும் அடிக்கடி அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவார். இதனால் வெறுத்துப்போன நான் திருமங்கலம் நீதிமன்றத்தில் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு மூலம் விவாகரத்து பெற்றேன்.

அதன்பின் எனது ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் கோமதிக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கோமதி என்னுடன் மீண்டும் வாழ விரும்புவதாகக் கூறி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனது தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் கோமதியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் என்னுடன் மீண்டும் வாழ விரும்பியதுபோல் தெரியவில்லை. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையிலேயே இருந்தது.

அவரது தந்தை சின்னச்சாமி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதால் என்னைப் பற்றி நான் பணிபுரியும் அலுவலகம், ராணுவத் தலைமையகம் என அனைத்து இடங்களுக்கும் ஏதாவது புகார் மனுக்களை அனுப்பிக் கொண்டே இருந்தார். இதனால் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதால் எனக்கு அவர்கள் மீது கடும்கோபம் எழுந்தது.

விவகாரத்து வழங்காமல் இழுத்தடிப்பு, சேர்ந்து வாழ மறுப்பது, பணியிடத்தில் தொந்தரவு எனப் பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் அமைதியாகவே இருந்தேன். இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் கடந்த வாரம் இங்கு வந்தேன்.

இந்த சூழலில்தான் எங்கள் ஊரில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு கோமதி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர்கள் என் வீட்டை கடந்து செல்லும்போது மாடியில் நின்ற எண்ணைப் பார்த்து கேலியாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சென்றனர். மேலும், இந்த பிரச்சினை தொடர்பாகப் பேசச் சென்ற எனது அக்கா பூரணகலாவை திருமண நிச்சயதார்த்த வீட்டில் வைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளனர்.

இதையறிந்த எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. உடனே மது அருந்திவிட்டு அரிவாள் மற்றும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவர்களைத் தேடிச் சென்றேன். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். முதலில் என் மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். ஆனால் குறி தவறியது. எனவே பட்டா கத்தியால் அனைவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றேன் என்று கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

மேலும் பட்டாகத்தி, துப்பாக்கியை புதுடெல்லியில் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார். அதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சின்னச்சாமியின் மகன் தங்கபாண்டி திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு வராததால் அந்த குடும்பத் திலேயே அவர் மட்டும் உயிர் தப்பினார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட 5 பேரின் சடலங்களும் நேற்று மாலை மங்கள்ரேவு கிராமத்தில் எரியூட்டப்பட்டது. அசம்பாதவிதம் தவிர்க்க அ.தொட்டியபட்டி, மங்கள்ரேவு கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x