Published : 27 May 2015 07:36 AM
Last Updated : 27 May 2015 07:36 AM

மன உளைச்சலில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள்: மதுக்கடைகளை மூட கோரிக்கை

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2003-ம் ஆண்டு 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது சுமார் 36 ஆயிரம் பேர் பணியமர்த் தப்பட்டனர். ஆனால் இன்றைக்கோ 28 ஆயிரத்து 600 பேர்தான் பணியில் உள்ளனர். சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மரணம், பணி விலகுதல் போன்றவற்றால் தற்போது பணியில் இல்லை.

டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி மரணமடைகின்றனர். அவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் பலரும் தன்னிலை அறியாத மதுவுக்கு அடிமையானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை கையாளும்போது ஊழியர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பார்களை நடத்துபவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கும் மது பாட்டில்களுக்கு முறையாக பணம் தருவதில்லை. அதை எதிர்த்து கேட்டால் தங்களின் செல்வாக்கை பயன் படுத்தி வேலையை விட்டே அனுப்பிவிடுவார்கள். இதனால் அவர்கள் தராத பணத்தையும் ஊழியர்கள்தான் சேர்த்துக் கட்ட வேண்டியுள்ளது.

கடையில் ஒரு பாட்டில் உடைந்தால் அதற்கு ஊழியர்கள் தங்களின் சொந்த பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. மது பாட்டில்கள் விற்பனைக்கு வரும் போது, ஏற்றுக்கூலி இறக்கு கூலி உள்ளிட்டவற்றை சில சமயங்களில் ஊழியர்களே கட்ட வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளால் ஆண்டுக்கு சுமார் 200 டாஸ்மாக் ஊழியர்களாவது மன உளைச்சலில் மரணமடைகிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சசம்பளமாக மேற்பார் வையாளருக்கே ரூ.6 ஆயிரத்து 500 தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளத்துக்காக அவர்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வு, மது விலக்குதான். மதுக்கடைகளை மூடிவிட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களின் படிப்புக்கு ஏற்ப வேறு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x