Published : 16 Sep 2014 09:12 AM
Last Updated : 16 Sep 2014 09:12 AM

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அக். 2-ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென் னையை அடுத்த பூந்தமல்லியில், நேற்று மதிமுக மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் வீதிகள்தோறும் பாய்ந்து ஓடும் மதுவால், தமிழகத்தில் போற்றி வளர்க்கப்பட்ட நெறிகளும், மரபுகளும் சீரழிந்து வருகின்றன. இலவசங்களை அள்ளி வழங்கி வாக்குகளைக் குவிப்பதற்காக, ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வருமானத்துக்காக அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப் படுகின்றன.

கேரள அரசுக்கு ஆண்டுக்கு 9,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தரும் மதுக்கடைகளை மூட, மக்கள் நலனில் அக்கறை கொண்டு அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே, தமிழகத்திலும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இக்கோரிக்கைக்காக வரும் அக்.2-ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இம்மாநாடு தீர்மானிக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புப்படி, தமிழகத் துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வும், காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களில் தேக்கி வைக்கப்படும் காவிரி நீரின் அளவை கண்காணிக்கவும் அதிகாரம் உடைய காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா.சபையின் மேற்பார்வை யில் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான தமிழர் களை கொன்று குவித்த இனப் படுகொலை குற்றவாளியான சிங்கள அதிபர் ராஜபக்சே இம்மாதம் 25ம் தேதி, ஐநா பொதுச்சபையில் உரையாற்ற விடுத்த அழைப்பை திரும்பப் பெறுவதுடன், அவரை பன்னாட்டு விசாரணை மன்றத்தின் முன்பு நிறுத்தி விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை சிக்கலை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் 78 மீனவர்கள் மற்றும் 72 படகுகளை மீட்டுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x