Published : 31 Mar 2015 08:27 AM
Last Updated : 31 Mar 2015 08:27 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 21-ல் கொடியேற்றம்: மே 4-ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப். 21-ம் தேதி கொடியேற்றமும், மே 4-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 20-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு நேரங்களில் நான்கு மாசி வீதிகளிலும் புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் தொடக்கமாக ஏப். 21-ம் தேதி காலை கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் ஏப். 28-ம் தேதி இரவு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 29-ம் தேதி திக்குவிஜயம், 30-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 1-ம் தேதி காலை தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

பின்னர் மே 2-ம் தேதி இரவு தீர்த்தவாரி, தேவேந்திரபூஜையுடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது என கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அழகர்கோவிலிலிருந்து மே 2-ம் தேதி கள்ளழகர் புறப்பாடு, 3-ம் தேதி காலை தல்லாகுளத்தில் எதிர்சேவையும், மாலை திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 4-ம் தேதி காலை 6.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மே 5-ம் தேதி வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மே 6-ம் தேதி பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் மே 7-ம் தேதி அழகர்கோவிலை வந்தடைகிறார் என அழகர்கோவில் துணை ஆணையர் வரதராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x