Published : 31 Aug 2016 09:24 AM
Last Updated : 31 Aug 2016 09:24 AM

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது: காங். புகாருக்கு முதல்வர் பதில்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் பேசும்போது, ‘‘நாடார் பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலிலும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும். இந்து தலித்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்களுக்கு வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும்’’ என்றார்.

அப்போது அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கு பதிலளித்து பேசியதாவது:

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது மனு அளிக்கப்பட்டுள்ளது. மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது. அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நிறுவன கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x