Published : 31 Aug 2016 09:40 AM
Last Updated : 31 Aug 2016 09:40 AM

மதன் மோசடி செய்த ரூ.69 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய தயார்: பச்சமுத்து மகன் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் மோசடி செய்த ரூ.69 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய தயாராக உள்ளோம் என எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தலைவரும், பச்சமுத்துவின் மகனுமான சத்யநாராயணா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கு போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் நிர்வாகியான மதன் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக மதனின் தாயார் தங்கம் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதேபோல மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பெற்றோர் தரப்பில் மற் றொரு மனு தாக்கல் செய்யப்பட் டது. இதுகுறித்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த வழக்கில் எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தலைவர் பச்சமுத்து சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தலைவரான சத்யநாராயணா பச்சமுத்து சார்பில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தாக்கல் செய்த மனுவில், “எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் பெயரைக் கூறி மதன் செய்துள்ள இந்த மோசடியால் எங்கள் நிறுவனத்தின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதன் மோசடி செய்த ரூ.69 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய தயாராக உள் ளோம்” என அதில் கூறப்பட்டிருந் தது.

பச்சமுத்துவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. குமார், “கல்லூரி நிர்வாகம் பணத்தை டெபாசிட் செய்ய முன்வந்திருப்ப தால் இந்த வழக்கில் கைதான பச்சமுத்துவுக்கு ஜாமீன் தர வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘சம்பந்தப் பட்ட விசாரணை நீதிமன்றத்தில் இந்த விவரத்தைத் தெரிவித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ள லாம். அதில் நாங்கள் தலையிட முடியாது” என்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான சினிமா ஃபைனான்சியர் போத்ரா, ‘‘இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ளக் கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார். மேலும் மதன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து சில ரகசிய தகவல்களையும் கூற வேண்டும்” என நீதிபதிகளிடம் முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘மதன் தொடர்பான தகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்கலாம்” எனக் கூறி போத்ரா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனக ராஜ், ‘‘இந்த ரூ.69 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்வதற் குப் பதிலாக பாதிக்கப்பட்ட மாண வர்களுக்கு நேரடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் மற்றும் பெற்றோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x