Published : 28 Jan 2015 08:21 AM
Last Updated : 28 Jan 2015 08:21 AM

மத பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

மதப் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங் கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஒழுங்கு நடவடிக்கைத் துறை இயக்குநர் சி.உமாசங்கர், கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களில் பங்கேற்று, மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 24 முதல் 26-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஜெபக்கூட்டங்களில் பங்கேற்க உமாசங்கர் முடிவு செய்திருந்தார். இதற்கு ஒரு தரப் பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலருக்கு டிஜிபி மூலம் இந்தத் தகவல் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, உமாசங்கருக்கு தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘அகில இந்திய பணிகள் விதிகள் 1968-ன்படி, அதில் கூறப்படாத செயல்களில் அகில இந்தியப் பணி களில் இருக்கும் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நீங்கள் பங்கேற்க இருந்த கூட்டங்களால் பொது அமைதி கெட்டதுடன், இரு தரப் பினர் மத்தியில் நல்லிணக்கம் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மதப் பிரச்சார நிகழ்ச்சி களில் கலந்துகொள்ளக் கூடாது. இதை மீறினால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உமாசங்கருக்கு எழுதப்பட்ட கடிதத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொதுத்துறையில் இருந்து வாய் மொழி எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட சாதி, மத, இன பிரச்சினைகள், கூட்டங்களில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், குறிப்பிட்ட மதத்த வரை தாக்கி எந்தவொரு பொது, இல்ல நிகழ்ச்சிகளும் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை மூலம் போலீஸாருக் கும் சில உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினை குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறும்போது, ‘‘மக்கள் பணத்தில் ஊதியம் பெறும் எந்த ஒரு அரசு அதிகாரியும், குறிப்பிட்ட மத, இனப் பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது. உமாசங்கரின் செயல் தவறானது. பணியில் இருந்துகொண்டே மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவரை பணியிடை நீக்கம் செய்யவும், பணி நீக்கவும் செய்யவும் சட்டத்தில் இடம் உண்டு’’ என்றார்.

உயிருக்கு ஆபத்து: உமாசங்கர்

‘தி இந்து’விடம் உமாசங்கர் ஐஏஎஸ் கூறியதாவது:

அகில இந்தியப் பணிகள் விதிகளின்படி கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் பணியிலிருக்கும் அதிகாரிகள் தங்கள் விருப்பம்போல் செயல்பட எந்தத் தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அரசால் எனது தனிப்பட்ட பிரசங்கப் பயணத்தை சட்டரீதியாகத் தடுக்க முடியாது. அதேநேரம், தற்போது தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளதால், நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன்.

என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனது பிரசங்கப் பயணத்துக்கு அரசு தடை விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கின் முடிவுக்குப் பிறகே ஜெபக்கூட்டங்களில் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x