Published : 05 Mar 2015 03:28 PM
Last Updated : 05 Mar 2015 03:28 PM

மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் பாஜக நிலைப்பாடு என்ன?- விளக்கம் கோரி திமுக செயற்குழு தீர்மானம்

மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடியின் கருத்துக்கு முற்றிலும் முரண்பாடான வகையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் பேசியவை அனைத்தும் கண்டிக்கத் தக்கவை; ஏற்கத்தக்கவையல்ல என்று அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைமைக் கழக செயற்குழு கூட்டம் வியாழன்கிழமையான இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவெற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில :

மத நல்லிணக்கமும் - பா.ஜ.க. நிலையும்!

பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது 27-2-2015 அன்று ஆற்றிய உரையில், இந்தியாவே முதன்மையானது என்பதே எனது அரசின் மதமாகும்.இந்திய அரசியலமைப்புச் சட்ட நூல் தான் எனது அரசின் ஒரே புனித நூல். தேச பக்தியே எனது அரசின் ஒரே பக்தியாகும். அனைவரது நலன் என்பதே அரசின் பிரார்த்தனை ஆகும். இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில் மத ரீதியில் அபத்தமான கருத்துகள் தெரிவிக்கப் படுவதையும், பாகுபாடு காட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது.

வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமேயன்றி, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று விரிவாக எடுத்துரைத்திருப்பது ஒற்றை மதவாதம், ஒற்றை மொழி வாதம் பேசிவருவோர்க்கு வாய்ப்பூட்டு போடுவதாக அமையக் கூடும் என்று நம்புவதால், மோடியின் இந்தக் கருத்துக்கு முற்றிலும் முரண்பாடான வகையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் பேசியவை அனைத்தும் கண்டிக்கத் தக்கவை; ஏற்கத்தக்கவையல்ல.

இந்தியாவின் கடைசி மாநிலமாக இறங்கி விட்ட தமிழகம்!

''2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தரம் தாழ்ந்து தவித்துத் தள்ளாடும் அவலத்தைப் பல நாளேடுகளும் சுட்டிக் காட்டி வருகின்றன. திரு. ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்து மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். இந்தக் காலம் நிர்வாகக் குழப்பம் மேலும் ஆழமாக வேரூன்றி, முக்கிய முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்பட முடியாத அல்லது ஒத்தி வைக்கப் பட வேண்டிய காலமாகவே இருந்துள்ளது.

மாநில அரசின் நிர்வாகத்தை, ஆலோசகர்கள் ஆக்கிரமித்துள்ளதால், பன்னீர்செல்வம் முதலமைச்சர்பொறுப்பிலே இருப்பதாகவே உணர முடியாத நிலை ஏற்பட்டு நிர்வாகம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதோடு; 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல திட்டங்களில் உள்ள சிக்கல்களை அகற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கான முயற்சிகளை எடுக்காமலும், கல்வித் துறையிலும், மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் மற்றும் பல துறைகளிலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமலும், குறிப்பாக 2014ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டினைக் கூட நடத்த முற்படாமலும், மாநில நிர்வாகம் சூறாவளிக் காற்றில் சிக்கிய படகைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்காக ஹோமம், யாகம், அர்ச்சனை, மண் சோறு, வேப்பிலை ஆடை, பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் ஆகியவற்றில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுவதிலும், தத்தமது துறைகளில் வரவு பார்த்து மூட்டை கட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு இந்த ஐந்து மாத காலத்தில் ஒரே ஒரு முறை தான் அமைச்சரவைக் கூட்டமே நடந்துள்ளது. முடிவடைந்த திட்டங்களுக்குத் திறப்பு விழா கூட நடத்தாமல், யாரோ ஒருவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டியவர்களாக அமைச்சர்கள் ஆகி விட்டார்கள். உதாரணமாக மெட்ரோ ரயில் திட்டம்தொடங்கப்படும் நிலையில் இருந்த போதிலும், அதிலே இந்த அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. நடைபெற்று முடிந்த ஆளுநர் உரை, வரும் ஆண்டுக்கான கொள்கை வழிகாட்டுதல் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாமல், கடந்த நான்காண்டு கால அரசுக்கு, வழக்கமாக வழங்கும் பாராட்டுரையாகவே அமைந்தது. அதன் மீது எதிர்க் கட்சியினர் யாரும் பேரவையில் ஜனநாயகரீதியில் தங்கள் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்பட வில்லை.

அதிமுக . அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன் கருதி ஆக்கபூர்வமாக அமையாததின் விளைவாகத் தமிழகம் மிக வேகமாகப் பின்னுக்குச் சென்று கொண்டிருக்கின்றது. மத்திய புள்ளியியல் துறை அறிக்கையின்படி, 2012- 2013இல் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், பீகார் 10.73 சதவிகிதம், குஜராத் 7.87 சதவிகிதம், கேரளா 8.24 சதவிகிதம், ஆந்திரா 5.08 சதவிகிதம், தமிழ்நாடு 3.8 சதவிகிதம் (18வது இடம்). தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் திமுக ஆட்சியில் 2009-2010 -ல், 20.93 சதவிகிதம்.

தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 2013-2014 -ல் 1.61 சதவிகிதம். தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி என்று பார்த்தால், திமுக ஆட்சியில் 2009-2010 -ல் 28.18 சதவிகிதம். அதிமுக ஆட்சியில் 2012-2013 -ல் 1.31 சதவிகிதம். தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் கடைசி இடமான 18வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குபவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் பயங்கரமானவை என்றும்; தொழிற்சாலைகள் தொடர்பான விவகாரங்கள், தொழிலாளர் இடையேயான பிரச்சினைகள், இவற்றில் உள்ளூர் ரௌடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகளின் தலையீடுகள் உள்ளன என்றும் ஏடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் இந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் ஆகியோர் தம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல், வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இலவசமாக வழங்கப்பட்ட மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்கள் ஒரு சில நாட்களிலேயே பழுது பார்க்கும் கடைகளுக்குப் போய் விட்டன; பெரும்பாலானவை காயலான் கடைகளுக்குப் போய் விட்டன;

இலவச ஆடு - மாடுகள் வயதானவையாக, தரம் குறைந்தவையாகவே இருந்ததால் வழங்கிய வேகத்திலேயே சந்தைக்குப் போய் விட்டன; மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களை எல்லாம் சேர்த்தால் தமிழக அரசின் மொத்தக் கடன் நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விடும் என அபாய அறிவிப்பு செய்யப்பட்டு, அதிமுக அரசு,முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, திவால் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது; மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் உரிய காலத்தில் தேவையான கவனம் செலுத்தாததால் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு தமிழக நிர்வாகம் அனைத்து வகையிலும் சிதைந்து சீர்கெட்டு, இந்தியாவிலேயே கடைசி மாநிலம் என்ற அவப்பெயரைத் தமிழகத்திற்குத் தேடித் தந்துள்ளது. இவற்றைக் கருத்திலே கொண்டு, தற்போதைய செயலற்ற, சீர்கேடான நிலைக்குத் தமிழகத்தை உள்ளாக்கிய அதிமுக அரசுக்குத் தனது கடுமையான கண்டனத்தை இந்தச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x