Published : 09 Feb 2016 05:41 PM
Last Updated : 09 Feb 2016 05:41 PM

போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட வேண்டும்: கருணாநிதி

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள 40 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பல புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 24-ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் கள விசாரணையை தொடங்கினர். திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருசில இடங்களில் நேரில் ஆய்வு செய்து போலி வாக்காளர்கள் பற்றிய திமுகவின் புகார்கள் உண்மை என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து முழுமையாக நீக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிகளுக்கு திமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x