Published : 25 Apr 2017 09:18 PM
Last Updated : 25 Apr 2017 09:18 PM

போராட்டம் 100க்கு 200% வெற்றி; விவசாயிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு 100க்கு 200% வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தினை புரிந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய – மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

ஸ்டாலின்: தமிழக வரலாற்றிலேயே இடம்பிடிக்கக்கூடிய வகையில் தமிழகத்திலே விவசாயப் பெருங்குடி மக்களுக்காக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம், நான் ஏற்கனவே சொன்னது போல, நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தப் போராட்டம் முழு அளவில் வெற்றிபெறுவதற்கு துணை நின்ற பொதுமக்களுக்கு நான் முதலில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், அதேபோல, பல தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய சகோதரர்கள், லாரி ஓட்டுநர்கள், திரையுலகத்தை சார்ந்திருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்கள், சினிமா திரையரங்க உரிமையாளர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள், இப்படி எல்லா வகையிலும் போராட்டத்துக்கு முழு ஆதரவை தந்தது மட்டுமல்ல, போராட்டம் வெற்றிபெற துணை நின்ற அனைவருக்கும் அனைத்துக்கட்சிகளின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, நடந்திருக்கக்கூடிய இந்தப் போராட்டத்தை பார்த்தாவது மத்தியில்-மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஏறக்குறைய 41 நாட்களாக அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில், டெல்லியில் விவசாய தோழர்கள், ஒரு தொடர் போராட்டத்தை பல கோணங்களில் நடத்தி முடித்து, இங்கே போராட்டத்தை அனைத்துக்கட்சிகள் நடத்துகிற காரணத்தால், இந்த நிலையில் அவர்கள் அந்தப் போராட்டத்தை தற்காலிமாக ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைத்துவிட்டு, உடனடியாக நேற்று இரவோடு இரவாக அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, இன்று காலை சென்னை வந்திருக்கிறார்கள். சென்னைக்கு வந்தவுடனே ரயில் நிலையத்திலிருந்து வட சென்னை பகுதிக்கு சென்று அங்கு நடைபெறக்கூடிய போராட்டத்தில் கலந்துகொண்டு அந்தப் போராட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

ஆகவே, நாம் மீண்டும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்தப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இந்தப் போராட்டத்தின் உணர்வை புரிந்து கொண்டு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர்: இந்தியாவையே இந்த போராட்டம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளாரே?

ஸ்டாலின்: ஏற்கனவே, அவர்கள் டெல்லியில் போராடிக்கொண்டிருந்த போதே இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்களை சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நேரடியாக சென்று அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அய்யாக்கண்ணு அவர்கள் சொன்னதுபோல், இந்தப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. எனவே, இப்பொழுதாவது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: இந்தப் போராட்டத்தை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஸ்டாலின்: எனக்கும் அந்த செய்திகள் கிடைத்தன. காவல்துறையை பொறுத்தவரையில் எப்படியாவது இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த, போராட்டத்தில் கலகத்தை ஏற்படுத்த எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதையெல்லாம் மீறி இந்தப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.

செய்தியாளர்: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க இடைக்கால தடையுத்தரவு போடப்பட்டு இருக்கிறதே?

ஸ்டாலின்: அதையும் இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால், இன்றைக்கு, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 3 மாத காலத்திற்கு திறக்கக்கூடாது என்று இடைக்கால தடையுத்தரவு போடப்பட்டு இருக்கிறது. நெடுஞ்சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். காரணம், மதுக்கடைகளை மூடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஆட்சி செயல்படுகிறது. அதனால், திமுக சார்பில் எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது நீதிமன்றம் மூலமாக மகிழ்ச்சிக்குரிய ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x