Published : 23 Jun 2017 09:01 AM
Last Updated : 23 Jun 2017 09:01 AM

பொறியியல் தர வரிசை பட்டியல் வெளியீடு: 59 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆப் பெற்று சாதனை- நீட் தேர்வு முடிவு வந்ததும் கலந்தாய்வு தேதி மாற்றப்படும்

பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. இதில் 59 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத் துள்ளனர்.

தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பிஇ, பிடெக் படிப்பில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த 20-ம் தேதி கணினி மூலம் ஆன் லைனில் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களின் தர வரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கு விண் ணப்பித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தங்களின் தர வரிசையை தெரிந்துகொள்ளலாம்.

தர வரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் அமைச்சர் அன்பழகன் கூறிய தாவது:

தர வரிசைப் பட்டியலில் 59 பேர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப் பெண் பெற்றுள்ளனர். அவர்களில் 36 பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதியுடனும் இருக்கின்றனர். அதேபோல 811 பேர் 199 கட்-ஆப் மதிப்பெண் ணும், 2.097 பேர் 198 கட்-ஆப் மதிப் பெண்ணும், 3,266 பேர் 197 கட்-ஆப் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருப்பவர்களில் கணிச மானோர் மருத்துவப் படிப்புக்கான தகுதியுடனும் உள்ளனர். பொறி யியல் கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களால் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை தாமதமாகியுள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் பொறியியல் கல்லூரி களில் காலியிடங்கள் ஏற்படும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப்படும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கலந்தாய்வை ஜூலை 31-ம் தேதிக்குள் நடத்தி முடித்து ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரி தொடங்கிவிட வேண்டும். தற்போது நீட் தேர்வு விவகாரத்தால் கலந்தாய்வு நடத்த காலதாமதமாகி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கலந்தாய்வை முடிக்க முடியாத நிலை ஏற்பட் டால், சட்ட நிபுணர்களுடன் ஆலோ சித்து கூடுதல் அவகாசம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, டான்செட் நுழைவுத் தேர்வு செயலாளர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் 10 ரேங்க் பெற்றவர்கள்

1. பி.ராம், தஞ்சாவூர், 2. எம்.ஹரிவிஷ்ணு, திருப்பூர், 3. வி.சாய்ராம், சென்னை, 4. ஆர்.எஸ்.கிருத்திகா, சேலம், 5. டி.யுவனேஷ், திருத்தணி, 6. எஸ்.வி.பிரீத்தி, கோவை, 7. கீர்த்தனா ரவி, கோவை, 8. டி.சதீஷ்வர், சேலம், 9. பி.சோபிலா, சேலம், 10. பி.சவுமியா, தருமபுரி.

தொழில்கல்வி பிரிவில் நாமக்கல் பி.அஜீத், 199.83 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x