Published : 18 Mar 2016 08:38 AM
Last Updated : 18 Mar 2016 08:38 AM

பொதுமக்கள், வியாபாரிகள் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சம் கொண்டுசெல்ல அனுமதி?- தேர்தல் ஆணையம் பரிசீலனை

10 ஆயிரம் விண்ணப்பம் -

தேர்தல் தொடர்பான சோதனைகளில், பொதுமக்கள், வியாபாரி களின் பணம் ரூ.1 லட்சம் வரை பறிமுதல் செய்யாமல் விலக்கு அளிக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 4-ம் தேதி வெளியானதில் இருந்தே, நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. விதி மீறலை தடுக்க வருவாய்த் துறை, காவல் துறையினர் அடங்கிய பறக்கும் படைகள், நிலையான கண் காணிப்பு குழுக்கள் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ரூ.8.52 கோடி பறிமுதல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், அனைத்து பணப் பரிமாற்றங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பொது மக்கள், வியாபாரிகள் உரிய ஆவண மின்றி எடுத்துச் செல்லும் பணம், அதிக அளவிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த 15-ம் தேதி நிலவரப்படி, ரூ.8 கோடியே 52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் கட்டப்பட்டுள்ளது.

‘ரூ.50 ஆயிரம் வரை பறிமுதல் செய்ய வேண்டாம். அதைவிட அதிக தொகையாக இருந்தாலும், தேர்தல் சம்பந்தப்பட்ட பணம் இல்லை என்று உரிய ஆவணங்கள் மூலம் தெரிந்தால், அதை உடனடியாக திருப்பித் தரவேண்டும். மக்களை தேவையின்றி அலைக்கழிக்கவோ, காக்கவைக்கவோ கூடாது’ என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப் பட்ட பணத்தை திருப்பித்தர, மாவட்டந்தோறும் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கருவூல அதிகாரி, தேர்தல் செலவின கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தானாக முன்வந்து விசாரணை நடத்தி, பணத்தை திருப்பித் தந்துவருகிறது.

இந்நிலையில், பறிமுதலுக்கு விலக்கு அளிக்கப்படும் வரம்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தலாமா என்றும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் எவ்வளவு பணம் கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கடைகளுக்கு மளிகைப் பொருள், காய்கறி சப்ளை செய்துவிட்டு பணம் பெறு பவர்கள் அதற்கான ரசீதையும், திருமணத்துக்கு நகை, பொருள் வாங்கச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழையும், மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்தச் செல்பவர்கள் அதற்கான கட்டண ரசீது போன்றவற்றையும் வைத்திருக்கலாம். நில விற்பனை, வாங்குதல் என்றால், அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது, அந்த பணம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆவணம் வேண்டும்.

எஸ்.பி.க்களுக்கு அறிவுரை

ரூ.1 லட்சத்துக்கு குறைவாக வைத்திருந்தால், அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு, 24 மணி நேரத்துக்குள் அந்த பணத்தை திருப்பித் தரவேண்டும். ரூ.5 லட்சம் வரை வைத்திருந்தால், அதிகபட்சம் 3 நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆவணங்கள் இருந்தால் விசாரணைக்கு பிறகு திருப்பித் தரப்படுகிறது.

இதுதொடர்பாக வடக்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக கூடுதல் டிஜிபி நேற்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து மற்ற மாவட்ட காவல் துறை அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ரூ.50 ஆயிரம் வரை பறிமுதல் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த வரம்பை ரூ.1 லட்சம் வரை உயர்த்தலாமா என்று தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளான ஏப்ரல் 22 முதல், பறக்கும் படை, கண்காணிப்பு படை கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கும். பணம் கொண்டு செல்லப்படுவது மேலும் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும். இருசக்கர வாகனங்கள்கூட சோதனை செய்யப்படக்கூடும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் 4.5 லட்சம் பேருக்கு தபால் வாக்கு

தமிழகம் முழுவதும் தபால் ஓட்டு அளிக்க உள்ள 4.5 லட்சம் பேருக்கான வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தேர்தல் ஆணையம் சேகரித்து வரு கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 4.5 லட்சம் பேர் வரை தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர், 75 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுவர்.

இவர்கள் தவிர, வெப்கேமரா இயக்குவோர், வீடியோ கேமரா இயக்குவோர், வாக்காளர் சேவை மைய பணியாளர்கள், தேர்தல் பணிக்காக வாடகைக்கு எடுக்கப்படும் வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 75 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களும் வாக்களிக்கும் வகையில், தபால் வாக்குக்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தற்போது இவர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் மே 2-ம் தேதி ஆகும். அதற்கு பின், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அடுத்த 2 தினங்களில் தபால் வாக்குக்கான வசதிகள், தேர்தல் பயிற்சியின்போது வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

10 ஆயிரம் விண்ணப்பம்

வாக்காளர்களுக்கு தற்போது புதிய வண்ண பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்படு கிறது. இதை, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 363 மையங்களில் ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் 3 இடங்களில் உடனடியாக அட்டை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை, சென்னையில் 600 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் வண்ண அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x