Published : 19 Feb 2017 04:29 PM
Last Updated : 19 Feb 2017 04:29 PM

பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார்: ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத அராஜகங்கள் குறித்து இந்திய குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்று நடந்த நிகழ்ச்சிகளில்,என் மீது அதிமுக அரசு 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அந்த வழக்குகளை சந்திக்க நாங்கள் எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கிறோம். நேற்றைக்கு சட்டப்பேரவையில் நடைபெற்று இருக்கக் கூடிய ஜனநாயக படுகொலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மிக விரைவில் நாங்கள் வழக்கு போட இருக்கின்றோம்.

சட்டப்பேரவையில் திமுகவினர் சபாநாயகரை தாக்கியதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கப்பட்டு, உடல் நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்ட திமுக மட்டுமல்ல, தமிழக மக்களும் தயாராக உள்ளனர்.

சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 22-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் பங்கேற்கவுள்ளேன். அதேபோல, காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் துரைமுருகன் பங்கேற்க இருக்கிறார்.

இன்றைக்கு எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் எப்படியெல்லாம் காவல்துறையினர் சட்டப்பேரவைக்குள் வந்து அராஜகத்தில் ஈடுபட்டு, எங்களை எல்லாம் அடித்து, மிதித்து, இழுத்து வந்து வெளியில் போட்டார்கள் என்பதை எல்லாம் ஆதாரங்களுடன் ஆளுநரிடத்தில் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள். மேலும், டெல்லிக்கு சென்று இந்திய குடியரசுத் தலைவரையும் சந்தித்து முறையிட இருக்கிறோம். அதற்காக அவரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம்'' என்று ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x