Published : 26 Nov 2014 12:33 PM
Last Updated : 26 Nov 2014 12:33 PM

பேரவைக்கு வந்து பேசக் கூடிய தைரியம் உள்ளதா?- கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். சவால்

சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், கருணாநிதி, 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது தனயன் மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர்.

சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கருணாநிதி, சட்டப் பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று நான் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

அந்த அறிக்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றிடவும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றவும் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்திருந்தேன்.

இலங்கை அரசால் பொய் வழக்கு தொடுக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் வழக்கினை நடத்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அவர்களது குடும்பத்தினைரைக் காப்பாற்ற செய்த உதவிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்ததோடு, அதிமுக அரசு, 5 மீனவர்கள் உயிர் காக்க விரைந்து செயல்பட்ட விவரங்களையெல்லாம் நான் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அது போன்றே, மேகதாது பிரச்சனையில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தான் என்பதையும் நான் விளக்கியிருந்தேன். அந்த அடிப்படையில் மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்ததையும் எனது அறிக்கையில் கருணாநிதிக்கு நினைவூட்டியுள்ளேன்.

சட்டமன்றத்திற்கு வருவது என்பது கருணாநிதியைப் பொறுத்த வரையில் சட்டமன்றத்தின் தாழ்வாரத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதுதான், சட்டமன்ற உறுப்பினரின் தலையாயப் பணி என்பதை கருணாநிதி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதிலிருந்து மேற்கோள் காட்டி நான் விளக்கியிருந்தேன்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த தி.மு.க ஆட்சியின் போது எப்படியெல்லாம் தரக்குறைவாக சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்கள்.

கருணாநிதியும், அவருக்கு பக்க பலமாக இருந்த அமைச்சர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் செய்த இது போன்ற அராஜக செயல்களில் அஇஅதிமுக ஒரு போதும் ஈடுபடாது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

எனவே, சட்டமன்றத்தில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரது சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை பேச அனுமதிப்பாரேயானால், சட்டமன்றத்தில் எடுத்துரைக்கக் கூடிய கருத்துகள் ஏதேனும் இருக்குமானால், சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், கருணாநிதி, 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x