Published : 18 Feb 2017 02:29 PM
Last Updated : 18 Feb 2017 02:29 PM

பேரவை பெருமையை உலகுக்கு காட்டும் ட்விட்டர் ட்ரெண்டிங்!

சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் பேரவையிலிருந்து திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பேரவையில் நடந்த அமளி துமளிகளும் ரகளைகளும் நாடறியும் வகையில் வீடியோ வடிவில் இப்போது காணக்கிடைக்கிறது.

இந்தச் சூழலில், காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்துமே இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்துள்ளன.

மக்களின் பிரதிநிதிகளின் பேரவை நடவடிக்கைகள், நம்பிக்கை வாக்கெடுப்பு, பேரவைத் தலைவர் செயல்பாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்தும் நொடிக்கு ஆயிரக்கணக்கான கருத்துகள் கொட்டப்பட்டு வருகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை, தமிழக அரசியல் சூழலையும், அரசியல்வாதிகளின் செயலபடுகளையும் அதிருப்தியுடன் பார்க்கும் வகையிலேயே இருக்கின்றன. பெரும்பாலும், இந்தச் செயல்பாடுகளை விமர்சித்தும் கலாய்த்தும் கருத்துகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் இயங்கும் திமுகவினரும், அதிமுகவினரும் பரஸ்பரம் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவதையும் அதிகம் கவனிக்க முடிகிறது.

குறிப்பாக, ட்விட்டரில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் சார்ந்த ஹெஷ்டேகுகள் காலையில் இருந்தே இந்திய அளவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் சிறப்பிடங்களைப் பெற்று வருகின்றன.

>MLAக்கள், >#TamilnaduAssembly>#Speaker உள்ளிட்ட ஹேஷ்டேகுகளில் கருத்துகள், கலாய்ப்புகள், செய்திகள், மீம்கள், விமர்சனங்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனிடையே, சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்தபடி கலாய்க்கும் வகையில் நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப்பட்டு தீவிரமாக பகிரப்பட்டு வருவதையும் காண முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x