Published : 16 Sep 2014 09:37 AM
Last Updated : 16 Sep 2014 09:37 AM

பெரியாறு அணையில் மின் இணைப்பு வழங்க கேரள வனத்துறை இடையூறு: தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிருப்தி

முல்லை பெரியாறு அணையில் மின் இணைப்பு வழங்க கேரள வனத்துறை இடையூறு செய்து வருவதால், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, அணையின் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைக்காக மூவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி, 3 மாதங்களுக்கு முன் மத்திய நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் தமிழக, கேரளப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு உதவியாக 5 பேர் அடங்கிய துணைக் குழு அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் 19-ம் தேதி பெரியாறு அணையில் அமைந்துள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடக்கவிருந்த கூட்டத்தை கேரளப் பிரதிநிதிகள் புறக்கணித்தனர். இதனால், கேரள அரசுக்குச் சொந்தமான பெரியார் இல்லத்துக்கு கூட்டம் மாற்றப்பட்டது. அங்கு கேரளப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதில் பெரியாறு அணைக்கு வாகனத்தில் வல்லக்கடவு வழியாக சென்றுவரும் வகையில் சாலையைச் சீரமைக்கவும், அணைப்பகுதியில் புதிய மின் இணைப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லாரியில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரள வனத்துறைக்குச் சொந்தமான பாதை வழியாகச் சென்றனர். ஆனால், கேரள வனத்துறையினர் லாரியை அனுமதிக்க மறுத்து விட்டனர். அதேபோல, அடர்ந்த வனப்பகுதி வழியாக மின் கம்பிகள் செல்லவும் கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பெரியாறு அணை பகுதியில் எந்தவொரு பணியும் நடைபெறவிடாமல் கேரள வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால், நேற்று அணையை ஆய்வு செய்வதற்காக மூவர் மற்றும் 5 பேர் குழுவில் இடம் பெற்றுள்ள குரியன் உள்ளிட்ட 3 கேரளப் பிரதிநிதிகள் படகுத்துறைக்கு வந்தபோது, தமிழகப் பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சாய்குமார் மற்றும் துணைக் குழுவில் இடம்பெற்றுள்ள செயற் பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர்.பின்னர், படகு மூலம் அணைக்கு சென்று மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழகப் பிரதிநிதி ஒருவர் கூறும் போது, கேரள வனத் துறையினர் வேண்டுமென்றே தொடர்ந்து இடையூறு செய்துவருகின்றனர். ஜெனரேட்டர் மூலம் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. மின்சாரம் இருந்தால் மட்டுமே மற்ற பணிகளைத் தொடங்க முடியும். ஆனால், எந்தப் பணிகளும் நடைபெறவிடாமல் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.

இதனிடையே அணை பலம் இழந்துள்ளதாக மீண்டும் பிரச்சினையைக் கிளம்பும் முயற்சியில் கேரளம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x