Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

பெரம்பலூரில் வெற்றிக்குப் போராடும் அதிமுக; வாக்காளர்களை ஈர்க்கும் ஐஜேகே

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பிரதான வேட்பாளர்களான அதிமுகவைச் சேர்ந்த மருதராஜா, திமுகவைச் சேர்ந்த சீமானூர் பிரபு, காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், பாஜக கூட்டணியின் ஐஜேகே பாரிவேந்தர் பச்சமுத்து ஆகிய நால்வருக்கு இடையேதான் நிஜமான போட்டி.

ராஜசேகரன் பெரம்பலூர், துறையூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிகம் அறியப்படாதவர். தனித்து நிற்பது கட்சியினருக்கு பெருமிதமாக இருக்கலாம்; ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அதுவே கால் வாரும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். முசிறி, குளித்தலை, மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் கணிசமாய் சமூக ஓட்டுகள் மற்றும் தனி நபர் செல்வாக்கு வாக்குகள் மட்டுமே இவரது பலம்.

பகுதியில் கட்சி கட்டமைப்பும் ஊக்கமான இளைஞர்களும் உள்ள கட்சி. ஒரு புறம் கே.என்.நேரு மறுபுறம் ஆ.ராசா என கட்சி தூண்களை பெரிதும் நம்பி இருக்கிறார் திமுக வேட்பாளர் சீமானூர் பிரபு. இஸ்லாமிய வாக்குகள் இவருக்கு தெம்பு சேர்க்கின்றன. தற்போதைய எம்பி நெப்போலியன் மீதான அதிருப்தி கட்சிக்கும் பிரபுவுக்கும் பலவீனம் சேர்ப்பவை. தனிப்பட்ட பின்புலம் இல்லாத வேட்பாளருக்கு அவரது பகுதி கட்சி பிரபலமான செல்வராஜ் காட்சிக்கே வரவில்லை. சமூக ஓட்டுகளை பங்கு போட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் காத்திருப்பதும் இவருக்கான ஓட்டுகளை சிதறடிக்கும்.

ஆளும்கட்சி அதிகாரம், இவற்றோடு படித்தவர் அமைதியானவர் என்றொரு மென் அபிப்பிராயம் அதிமுக வேட்பாளர் மருதராஜா மேல் இருக்கிறது. கட்சி தலைமைக்கு பயந்து பொறுப்பாளர்கள் தீயாய் வேலை செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இடங்களில் அப்படி வேலை செய்வதாய் காட்டிக்கொள்வதுதான் உண்மையில் மருதராஜாவின் பிரச்சினை. 3 ஆண்டு ஆளும்கட்சி மீதான அதிருப்தியை பிரச்சாரத்தில் எதிர்கொண்டதும், பெரம்பலூர் தவிர்த்து ஏனைய சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர் அறியப்படாதவராக இருப்பதும் சறுக்கல்கள். வெற்றி கிடைத்தால் அதுவும் கூட குறைவான வாக்கு வித்தியாசத்தில், போராடிப் பெற்றதாகவே இருக்கும்.

தொகுதியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பவர் பாஜக கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து. தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்ற போதும் நடுநிலையாளர்கள், படித்தவர்கள், புதிய வாக்காளர்களை அதிகம் ஈர்க்கிறார். அவரது இதர அடையாளங்கள், பிரச்சார நேர்த்தி இவற்றுடன் தேர்தலுக்கு முன்னரே ஊர்ஜிதமானதாக ஒரு கற்பித வெற்றி பிம்பத்துடன் உலா வருகிறார்.

பிரதான கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் அனைவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வாக்குகள் சிதறும்போது பாரிவேந்தர் கரைசேர வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் நடுநிலையாளர்கள். ஆனால், தலித் வாக்கு வங்கி கணிசமாக இருக்கும் ஒரு தொகுதியில், பிரச்சாரம் செய்யாமல் குறிப்பிட்ட தெருக்களை தவிர்ப்பதாக எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது சறுக்கல் ஏற்படுத்தக்கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x