Published : 30 Mar 2017 11:28 AM
Last Updated : 30 Mar 2017 11:28 AM

பெண்கள் போர் செய்யும் நடுகல் கிருஷ்ணகிரியில் கண்டுபிடிப்பு

தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்தில் பெண்கள் போர் செய்யும் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அறம் வரலாற்று ஆய்வு மைய தேடல் குழு தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சீனிவாஸ், இராசு, காமராஜ், சிவக்குமார், முருகேச பாண்டியன் ஆகியோர் ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்தில் பெண்கள் போர் செய்யும் நடுகல்லைக் கண்டறிந்தனர். இது குறித்து ‘தி இந்து’விடம் தேடல் குழுவினர் கூறியதாவது:

தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தில் இடதுபுறம் விவசாய நிலத்தின் வழியே பன்னியம்மன் ஏரிகோடி அமைந்துள்ளது. இப்பகுதியில் வீடு போன்ற அமைப்புடன் நடுகற்கள் அடங்கிய தொகுப்பு அமைந்துள்ளது. இந்த நடுகற்களில் 13 மற்றும் 14-ம் நூற்றாண்ட்டைச் சேர்ந்தவை. 3 பெண்கள், 3 குதிரைகளின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. 3 பெண்களின் வலது கரத்தில் சிறிய ஆயுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் 3-வது பெண் சிற்பங்களுக்கு மேல் குடை பிடிக்கப்பட்டுள்ளது. 2 பெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும். நடுவில் உள்ள பெண் சிற்பம் அரசியாக இருக்க வேண்டும். அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண் கொற்றைக்குடை பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வூரை அரசி ஆட்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஆட்சி செய்யும்போது ஏற்பட்ட சண்டையில் 3 பெண்களும் உயிரிழந்திருக்க வேண்டும். போரில் உயிரிழந்த பெண்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு போர் வீரர் வாள், கேடயத்துடன் முன்வரிசையில் நிற்கிறார். அவர் அரசியின் பாதுகாப்பு படைவீரராக இருக்க வாய்பிருக்கிறது. இச்சிற்பங்களின் மேற்புறத்தில் சிறு, சிறு கோடுகள் செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது போர் நடந்த இடம் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விஜய நகர பேரரசர் 2-ம் கம்பண்ணனின் மனைவி, மதுரை விஜயத்தின் போது அரசனுடன் சென்று போரில் ஈடுபட்டார். அதை வெளிப்படுத்து வதாகவும் கூட இக்கற்சிலை இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் தெரிவித்துள்ளார். பெண்கள் போரில் ஈடுபட்டுள்ள நடுகற்கள், தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகற்களில் முதன்மையானதாக இருக்கும். இவ்வாறு தேடல் குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x