Last Updated : 28 Sep, 2016 08:51 AM

 

Published : 28 Sep 2016 08:51 AM
Last Updated : 28 Sep 2016 08:51 AM

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு எதிரொலி: கால் டாக்ஸிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத உரிமையாளர் மீது நடவடிக்கை

அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொள்ள கமிஷனர் அறிவுரை

கால் டாக்ஸிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பயணத்தின்போது குற்றம் நடந்தால் பயணிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

கால் டாக்ஸிகளுக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. சமீப காலமாக பல சர்வதேச நிறுவனங்கள் கால் டாக்ஸிகளை இயக்கி வருகின்றன. இதனால், உள்ளூர் கால் டாக்ஸி நிறுவனங்களின் வருமானம் பெரிதும் சரிந்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருந்த பலர், இந்த கால் டாக்ஸி நிறுவனங்களில் சேர்ந்துவிட்டனர். சர்வதேச கால் டாக்ஸி நிறுவனங்களில், 'மொபைல் போன் ஆப்' மூலம் எளிதில் வாகனங்களை 'புக்' செய்ய முடிவதாலும், வழக்கமான கால் டாக்ஸிகளை விட கட்டணம் குறைவாக இருப்பதாலும், பெரும்பாலானோர் இவற்றை பெரிதும் விரும்புகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகர் நோக்கி தனியார் கால்டாக்ஸியில் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அவரிடம் கால்டாக்ஸி டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் பாலியல் ரீதியில் தவறாக நடந்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கால்டாக்ஸி உரிமையாளர்களை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூடுதல் காவல் ஆணையர்கள் சங்கர், ஸ்ரீதர் ஆகியோரும் ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி, அனைத்து கால் டாக்ஸிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மேலும், பயணத்தின்போது தொந்தரவு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் ‘100’ஐ அழைக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். தவறு செய்யும் கால்டாக்ஸி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் அறிவுறுத்தல்

வாகனங்களில் உரிமையாளரின் பெயர், செல்போன் எண்களை பயணிகளுக்கு தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். ஓட்டுநர்களின் நிரந்தர முகவரி மற்றும் தற்காலிக முகவரியை கால்டாக்ஸி நிறுவனங்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர்கள் அனைவருக்கும் கால்டாக்ஸி சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. கால்டாக்ஸி நிறுவனங்கள் டிரைவர்களை பணியமர்த்தும்போது அவர்களைப் பற்றி முறையாக விசாரித்து காவல்துறை மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெற்ற பின்னரே பணியமர்த்த வேண்டும்.

கால்டாக்ஸி டிரைவர்கள் தங்களது வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது வேறு நபர்களை எக்காரணம் கொண்டும் ஏற்றக்கூடாது என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x