Published : 23 Sep 2014 03:12 PM
Last Updated : 23 Sep 2014 03:12 PM

புதுவை: கோயிலுக்குள் நுழைய தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு

புதுவையில் உள்ள கலிதீர்த்தால்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்குள் நுழைய தலித் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டதால், அக்கட்சி அலுவலகத்திற்கு கடந்த ஞாயிறன்று தீவைக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

தலித்துகள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சாதி இந்துக்கள் தடை விதித்துள்ளனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டமிட்டது.

சாதி இந்துக்களால் அடக்குமுறைக்கு ஆளாகும் தலித் பிரிவினரின் உரிமைகளுக்காகப் போராடிய, மறைந்த மார்க்சிஸ்ட் தலைவர் பி.ஸ்ரீனிவாச ராவ் நினைவு தினத்தன்று கலிதீர்த்தால் குப்பம் திரவுபதி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

குடும்ப வன்னிய ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரிலான குழுவைச் சேர்ந்த சில வன்னியர்கள் இந்தக் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தடுக்க வழிமுறைகளை விவாதித்தனர் என்று போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதத்திற்குப் பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் கோயிலுக்கு அருகில் இருக்கும் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு 40 இளைஞர்கள் கொண்ட கும்பல் தீவைத்ததாகக் கூறப்படுகிறது.

தலித்துகளுக்கு கோயில் நுழைவு அனுமதி மறுப்பு பற்றி விபிஜி நகரைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கும் போது, “கோயில் விழாக்காலங்களில் வன்னியர் பிரிவைச் சேர்ந்த பெரியவர்கள் திரவுபதி அம்மன் கோயில் வாசலில் கூடி நின்று கொண்டு தலித்துகள் கோயிலுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். இதனால் தலித்துகள் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் செல்கின்றனர்” என்றார்.

68 வயதாகும் தலித் விவசாயி ஒருவர் கூறும்போது, “10 ஆண்டுகளுக்கு முன்னால் அனைவரையும் கோயிலுக்கு வரவேண்டும் என்று முதியோர்கள் அழைத்தனர், சமீப காலங்களில்தான் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் எங்களை கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று கூறிவருகின்றனர்" என்றார்.

இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி கிளை செயலர் வி.பெருமாள், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும் போது, “தீண்டாமைக்கு எதிராக நிச்சயம் போராட்டம் தொடரும், தலித் உரிமைகளை கட்சி ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை, ஆகவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x