Published : 12 Jun 2015 09:08 AM
Last Updated : 12 Jun 2015 09:08 AM

புதுச்சேரி கடற்பகுதியில் 3-வது நாளாக விமானத்தை தேடும் பணி தீவிரம்

மாயமான விமானத்தை புதுச்சேரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் மூன்றாவது நாளாக தேடிவருகின்றனர்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடந்த 8-ம் தேதி இரவு மாயமானது. இதை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர காவல் படை மற்றும் புதுச்சேரி கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி-நாகை இடையே விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் வேட்டை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி கடலோர காவல் படையினர் மூன்றாவது நாளாக கடலுக்குள் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை சந்தித்து காணாமல்போன விமானம் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

புதுச்சேரிக்குட்பட்ட 13 மீனவ கிராம கடல் பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மீனவ கிராம கடல் பகுதிகளில் புதுச்சேரி கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடலோர காவல் படைக்கு உதவிடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த கடல் சாகச நீச்சல் வீரர்கள் அரவிந்த் மற்றும் ஐய்யனார் ஆகியோர் ஆழ் கடலுக்குள் சென்று காணாமல் போன விமானத்தை தேடி வருகின் றனர்.

பாகங்கள் தென்படவில்லை

இதனிடையே மாயமான விமானத்தின் பாகங்கள் எதுவும் காரைக்கால் கடற்பரப்பில் தென்படவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்ட மீனவர் கள் கடந்த 2 நாட்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு, நேற்று கரைக்கு திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் கிளிஞ்சல் மேடு மீனவர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “கடந்த 2 நாட்களாக காரைக்கால் முதல் கோடியக்கரை வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தோம். கடற்படையினர் அறிவுறுத்தியபடி நாங்களும் தேடுதலில் ஈடுபட்டோம். காரைக்கால்- கோடியக்கரை பகுதியில் நாங்கள் மீன்பிடித்த பகுதியில் விமானத்தின் எந்த பொருளும் தென்படவில்லை. மீண்டும் கடலுக்குள் செல்லும் போது தேடுதலில் ஈடுபடுவோம்” என்றார்.

பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிறிய ரக கிளைடர் விமானம் மூலம் கடலோர காவல் படை கமாண்டோ பிரிவைச் சேர்ந்த மணிகண்ணன் தலைமையிலான 3 பேர் குழு கடலூரில் இருந்து புதுச்சேரி வரையிலான 10 சதுர கி.மீ. பரப்பளவில் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் மாங்குரோவ் சதுப்பு நில காடுகள் பகுதியில் நேற்று பிற்பகலில் தேடுதல் வேட்டை நடந்தது. காணாமல்போன விமானத்தில் இருந்து வரும் சிக்னல்களை சேகரித்து அதன் மூலம் மாயமான விமானத்தை கண்டறிவது தொடர்பாக அந்த துறை நிபுணரான கோவையை சேர்ந்த சிபிதரன் நேற்று கடலூர் வந்து கருவிகளுடன் படகில் புதுச்சேரி மற்றும் கடலூர் கடல் பகுதியில் ஆய்வு செய்து வரு கிறார். மேலும், விமானத்தை தேட விசாகப்பட்டினத்தில் இருந்து அதி நவீன நீர் மூழ்கி கப்பல் ஒன்று கடலூருக்கு வந்து கொண்டிருப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x