Published : 18 Dec 2014 11:58 AM
Last Updated : 18 Dec 2014 11:58 AM

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் 3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை: 4 பேர் மீட்பு

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரம விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகள், பெற்றோருடன் நேற்று கடலில் குதித்தனர். அதில், 3 பெண்கள் இறந்தனர். 4 பேர் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, அவரது சகோதரிகள் ஜெய, அருண, ராஜ்ய, நிவேதிதா ஆகிய 5 பேரும் தங்கி இருந்தனர். அவர்கள் 5 பேரும் 6 மாதங்களுக்குள் ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதுவரை ஆசிரம விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, புதுச்சேரி குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் இருந்து 5 சகோதரிகளையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா, ஆசிரம அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் ஏறி நின்று நேற்று முன்தினம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை மீட்க போலீஸார் சென்றபோது, மற்ற 4 சகோதரிகளும் வேறொரு கட்டிடத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். அவர்களை போலீசார் சாதுர்யமாக மீட்டு வந்தனர். பின்னர், எஸ்பி ரவிக்குமார், வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உளவியல் ஆலோசனை வழங்கி அவர்களது தந்தை பிரசாத், தாய் சாந்திதேவியுடன் அனுப்பி வைத்தனர்.

கடலில் குதித்தனர்

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சகோதரிகள் 5 பேரும் தங்கள் பெற்றோருடன் காலாப் பட்டுக்கு சென்று அனைவரும் கடலில் குதித்தனர். ஆனால், அவரது தந்தை பிரசாத் அலற தொடங்கினார். சத்தம் கேட்டு, அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்தனர். அதற்குள், அருண (52), ராஜ்ய (48), தாயார் சாந்திதேவி (78) ஆகியோர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். கடலில் தத்தளித்த நிவேதிதா, ஹேமலதா, ஜெய, தந்தை பிரசாத் ஆகிய 4 பேரையும் மீனவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து, சாந்திதேவி, அருண, ராஜ்ய ஆகிய 3 பேரின் உடல்களும் வெவ்வேறு இடங்களில் கரை ஒதுங்கின. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x