Published : 28 Sep 2016 08:21 AM
Last Updated : 28 Sep 2016 08:21 AM

பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார்

‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 49.

‘கும்மாளம்’ என்ற படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கும்மாளம் படத்தில் ‘திமுசு கட்ட’, வேட்டைக்காரன் படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குதே’, சகுனி படத்தில் ‘போட்டது பத்தல மாப்புள’, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பனாரஸ் பட்டு கட்டி’, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் ‘நெஞ்சோரத்தில்’ என்பது உட்பட பிரபலமான பல பாடல்களை எழுதியுள்ளார். ‘சைத்தான்’ உட்பட வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடல் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில். படித்த அண்ணாமலை, ‘ஜூனியர் விகடன்’ இதழில் உதவி ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைப் பணியில் இருந்து விலகி முழுமூச்சாக பாடல் எழுத ஆரம்பித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கீழப்பட்டு கிராமம்தான் இவரது சொந்த ஊராகும். சென்னை ஹாரிங்டன் சாலையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. இறந்த அண்ணாமலைக்கு மனைவி மற்றும் மவுனா என்ற மகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x