Published : 21 Apr 2014 08:41 AM
Last Updated : 21 Apr 2014 08:41 AM

பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு: தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி

அரசியல்வாதிகளில் அவர் ஒரு மிதவாதி. இலக்கிய உலகில் அவர் வனப்பேச்சி. எதிர்க்கட்சியினருக்கும் அவரை நிரம்பப் பிடிக்கும். பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் திமுக-வின் தமிழச்சி தங்கப் பாண்டியன். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

இந்தத் தேர்தலில் திமுக-வின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

கருத்து கணிப்புகளை எல்லாம் கடந்து திமுக-வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தளபதி ஸ்டாலினின் இடைவிடாத பிரச்சாரம், கடுமையான உழைப்பு, திட்டமிடல் ஆகியவற்றால் மக்கள் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருக்கிறது.

வழக்கமாக பிரம்மாண்டமான கூட்டணி அமைக்கும் திமுக, இந்த முறை அப்படி அமைக்க தவறிவிட்டதே?

நிச்சயம் இல்லை. திமுக-வுக்காக தேசிய கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள்தான் காத்திருக்குமே தவிர திமுக காத்திருக்காது.

சொல்லப்போனால், தேசிய கட்சிகள்தான் இத்தனை காலம் திமுக-வின் தயவில் ஆட்சி செய்தன. கூட்டணிக்காக திமுக பிற கட்சிகளிடம் வலியப் போகாது.

அதேசமயம், தன்னைத் தேடி வருபவர்களையும் ஒதுக்காது. கொள்கை ரீதியாக ஒத்த கருத்துள்ள கட்சிகளை அது அணைத்துக்கொள்ளும். திமுக-வைப் பொறுத்தவரை தனித்து போட்டியிட்டாலும்கூட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும்.

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்ற அழகிரி உள்ளிட்ட சிலரின் கருத்து குறித்து?

இந்த நிமிடம் வரை திமுக-வின் தலைவர் கலைஞர்தான். ஆனால், எதிர்காலத்தில் திமுக-வை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின் மட்டுமே. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் ஒருகாலமும் எங்கள் கட்சியினர் இடையே மாற்றுக் கருத்து இல்லை.

திமுக உட்பட பொதுவாகவே தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெண் வேட்பாளர்கள் மிகக் குறைவு. ஒரு பெண்ணாக உங்கள் கருத்து என்ன?

அனைத்துக் கட்சிகளிலும் இந்த குறை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். மற்ற கட்சிகளில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை வைத்து மாநாட்டை தொடங்கியது எங்கள் கட்சி. இன்றும் திமுக-வின் முக்கியக் கூட்டங்களிலும் மாநாடு களிலும் பெண்கள்தான் கொடி ஏற்றுகிறார்கள். பெண்களிடம் போட்டியிடும்படி திமுக கேட்டு, சூழ்நிலை காரணமாக பெண்கள் மறுத்திருக்கலாம் அல்லவா?

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்பது குறித்து?

ஜனநாயக நாட்டில் பிரதமராக யாரும் ஆசைப்படலாம். ஒரு அரசியல் தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் ஜெய லலிதாவும் அப்படி கனவு காணலாம். அவருக்கு அந்த உரிமையும் உண்டு. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரின் உரிமைகளையும், கனவுகளையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஜனநாயக நாட்டில் பிரதமராக யாரும் ஆசைப்படலாம். ஒரு அரசியல் தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அப்படி கனவு காணலாம். அவருக்கு அந்த உரிமையும் உண்டு. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரின் உரிமைகளையும், கனவுகளையும் நாங்கள் மதிக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x