Published : 16 Feb 2017 10:25 AM
Last Updated : 16 Feb 2017 10:25 AM

பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய அரசியல் பரபரப்பு இன்றளவும் நீடிக்கிறது. நீண்ட மவுனத்துக்குப் பிறகு ஆளுநர், அதிமுக சட்டமன்றக் கட்சிக்குழுத் தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துள்ளார். | முழு விவரம் > >தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் எடப்பாடி பழனிசாமி

தண்ணீர்ப் பஞ்சம், நீட் தேர்வுக்குத் தீர்வு கிடைக்குமா, விவசாயம் தழைக்க ஏதாவது வழிபிறக்குமா என்ற சாமானியர்களின் ஏக்கக் குரல்களுக்கு மத்தியில் சலசலத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியலின் இன்றைய அதிர்வுகள் குறித்த தொகுப்பு.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

*

9.20 pm: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை

பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

8.20 pm: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

8.10 pm: ஓபிஎஸ் தலைமையில் தர்ம யுத்தத்தை தொடர்வோம் என்று ஓபிஎஸ் மதுசூதனன் கூறியுள்ளார். அதன் விவரம்: >எடப்பாடி பழனிச்சாமி அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மதுசூதனன்

8.00 pm: மக்கள் விரும்பாத ஆட்சி தூக்கி எறியப்படும்: ஓபிஎஸ்

ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஏழரை கோடி மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள். மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. மக்கள் விரும்பாத ஆட்சி தூக்கி எறியப்படும். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே தலையாயக் கடமை என்று மக்கள் சபதம் ஏற்றுள்ளார்கள்'' என்றார். அதன் விவரம்: >மக்கள் விரோத ஆட்சியை விலக்கும்வரை ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்: ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்

7.45 pm: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை

புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பி.எச்.பாண்டியன், செம்மலை, மதுசூதனன் ஆகியோரும் உடன் வந்தனர்.

7:15 pm: பிப்.18-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். அதன் விவரம்: >பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

7.00 pm: நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். அதன் விவரம்: >நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை: க.அன்பழகன்

6.45 pm: கூவத்தூர் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

6.20 pm: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - எடப்பாடி பழனிசாமி

மெரினாவில் தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். பெரும்பான்மையை நிரூபித்து ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர்வோம்'' என்றார். அதன் விவரம்: >பெரும்பான்மையை நிரூபித்து ஜெ. ஆட்சியைத் தொடர்வோம்: எடப்பாடி பழனிசாமி

6.15 pm: எம்.ஜி.ஆர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். டிடிவி தினகரனும் உடன் மரியாதை செலுத்தினார்.

6.05 pm ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். அதன் வீடியோ இணைப்பு: >ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

5.45 pm ஓபிஎஸ் இல்லம் அருகே பதற்றம்: போலீஸார் குவிப்பு

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

5.01 pm: ஆளுநர், முதல்வரோடு அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

4.57 pm: தேசிய கீதத்துடன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நிறைவடைந்தது.

4.51 pm: முதல்வர் நீங்கலாக 30 அமைச்சர்களும் நான்கு பிரிவுகளாகப் பதவியேற்றனர். முதலிரண்டு குழுக்கள் 8 பேர்களாகவும், அடுத்த இரு குழுக்கள் 7 பேர்களைக் கொண்டதாகவும் பிரிக்கப்பட்டது.

4.48 pm: முதலமைச்சரைத் தொடர்ந்து 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்தனர். ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

4.40 pm: எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் 21 வது முதல்வராகப் பதவியேற்றார். முதல்வராகப் பதவியேற்ற பழனிசாமிக்கு, ஆளுநர் பச்சை நிறப் பூங்கொத்து அளித்தார். >| ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக பதவியேற்பு; 30 அமைச்சர்களும் பதவியேற்றனர் |

4.38 pm: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.

4.35 pm: ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் பொருத்தப்பட்ட சுழல் விளக்கு, அரசு இலச்சினை ஆகியவை அகற்றப்பட்டது.

4.24 pm: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தனர். இன்னும் சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்கிறார்.

4.11 pm: டெல்லியில் மைத்ரேயன் தலைமையில் 9 எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து, பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், கட்சியின் 'இரட்டை இலை' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

மைத்ரேயன் தலைமையிலான ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள். | படம்: சந்தீப் சக்சேனா

3.57 pm: முதல்வர் பழனிசாமி, நாளை காலை சசிகலாவைச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

3.49 pm: ஆளுநர் அளித்துள்ள 15 நாட்கள் அவகாசம் தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்பட வழிவகுக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

3.34 pm: 'எங்களை பதவி நீக்கியது செல்லாது; எனவே அதே பதவியில் நாங்கள் நீடிக்கிறோம். விரைவில் அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும்' என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.

3.16 pm: புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் பழனிசாமியின் வசம் நிதி, வருவாய், பொதுப்பணி, காவல்துறை, ஆட்சிப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறைகள் உள்ளன. முக்கிய மாற்றமாக பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்க உள்ளார். முழு விவரம் > >தமிழக புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

3.02 pm: 'தமிழகத்தில் தற்போது நிகழவுள்ள ஆட்சியால் எந்தப் பலனும் இல்லை' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2.56 pm: 'மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆட்சி விரைவில் மலரும். நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் உண்மையாக வாக்களிக்க வேண்டும்' என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.

2.49 pm: 'தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு நல்ல விதமாகவும், சட்டப்படியும் இருக்கும். அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ்ஸின் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள். அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தங்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டும்' என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2.44 pm: போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2.31 pm: அதிமுக தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி, ஓபிஎஸ் ஆதரவு எம்பி மைத்ரேயன் டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியைச் சந்தித்து வலியுறுத்தினார்.

2.19 pm: ஆளுநரை மீண்டும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, புதிய அமைச்சரவைக்கான பட்டியலை அவரிடம் வழங்கினார். பெரும்பாலான அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக வாசிக்க > >அரசியலில் எடப்பாடி பழனிசாமி: அறிக 10 தகவல்கள்

1.57 pm: 'உண்மையான அதிமுகவினர் நாங்கள்தான் என்பதால் ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் எங்களிடம் திரும்பி வருவதற்குத்தான்!' என்று அதிமுக எம்.பி. விஜயகுமார் கூறியுள்ளார்.

1.42 pm: எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் புறப்பட்டனர். சில எம்எல்ஏக்கள் கிளம்பவில்லை.

கூவத்தூர் சொகுசு விடுதியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர் | படம்: ம.பிரபு.

1.29 pm: 'எங்களின் தர்ம யுத்தம் தொடரும். கட்சியும், ஆட்சியும் குடும்ப ஆதிக்கத்துக்குச் செல்வதைத் தடுத்து, மக்களாட்சியை அமைப்போம். தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். | முழு விவரம் > >தர்மயுத்தம் தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் சூளுரை

1.15 pm: 'காலம் கடந்து அறிவித்தாலும், ஆளுநரின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரம் 15 நாட்கள் அவகாசம் எதற்குத் தரப்பட்டது எனப் புரியவில்லை' என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | முழு விவரம் > >15 நாள் அவகாசம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்

1.09 pm: 'அதிமுகவை எவராலும் எதுவும் செய்ய முடியாது. 15 நாட்கள் மட்டுமல்ல; 15 ஆண்டுகளானாலும் கட்டுக்கோப்பாக இருப்போம். சின்னம்மாவை வெளியில் எடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்' என்று தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

12.53 pm: 'இது மக்களின் வெற்றி; தர்மமே வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சின்னம்மாவும் சோதனைகளில் இருந்து மீண்டு வருவார். அதிமுகவின் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

12.49 pm: முதல்வராக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி பதவியேற்க உள்ள நிலையில், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருடன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

12.42 pm: ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்களோடு எம்.பி. மைத்ரேயன், இன்று பிற்பகல் 2.45 மணிக்கு டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

12.31 pm: 'இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெறும். சின்னம்மா ஆசியோடு மீண்டும் அம்மாவின் ஆட்சி' என்று அதிமுகவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.20 pm: ஆளுநர், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்ததை அடுத்து, கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம். படம்: ம.பிரபு

12.12 pm: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை நியமித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், 15 நாட்களில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. | முழு விவரம் > >முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களில் வாக்கெடுப்பு

12.06 pm: 'ஆளுநர்- எடப்பாடி சந்திப்புக்குப் பிறகே, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்போம்' என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.59 am: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அவரின் வழக்கறிஞர்கள் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

11.53 am: எம்எல்ஏக்களை மீட்கக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இரண்டு எம்எல்ஏக்களின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்தது.

11.46 am: 'எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்குமே காங்கிரஸ் ஆதரவு அளிக்காது' என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

11.32 am: அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

11.24 am: இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறலாம் என்று எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.

11.19 am: எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டனர்.

11.11 am: 'ஆளுநர் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

10.59 am: ஆளுநரின் அழைப்பை அடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகை விரைந்ததால் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

10.40 am: 'ஆளுநரைச் சந்திக்க நாங்கள் நேரம் கேட்கவில்லை. அவரேதான் எங்களை அழைத்திருக்கிறார். இனி காலதாமதம் செய்வதற்கு வழியில்லை' என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

10.34 am: மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் செல்கின்றனர்.

10.19 am: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படாத நிலையில் ஆளுநரை இன்று மீண்டும் சந்திக்கவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் இன்று காலை 11.30 மணிக்கு அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கூவத்தூர் விடுதியிலிருந்து சென்னை புறப்பட்டார்.

ஆளுநரின் அழைப்பை அடுத்து, கூவத்தூரில் இருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி. படம்: ம.பிரபு

9.46 am: அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூவத்தூர் விடுதிக்கு வந்துள்ளார். 'இங்குள்ள எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக உள்ளோம்; காவல்துறையால் எங்களை அச்சுறுத்த முடியாது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

9.29 am: கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ ஆறுமுகத்துக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போதுள்ள சூழல் காரணமாக அவருக்கு அங்கேயே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

9.08 am: எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் விடுதியில் காவல்துறையினர் இரண்டாம் நாளாக விசாரணை செய்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.

8.47 am: பெங்களூரு சிறையில் சசிகலாவும் இளவரசியும் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய இரவு உணவை புறக்கணித்த அவர் இன்று காலை உணவு சாப்பிட்டதாக தெரிகிறது.

முந்தைய முக்கிய செய்திகள்

> ஆளுநரிடம் ''பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்'' என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். | முழு விவரம் > >ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு

> தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டப்பேரவை கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் 10 அமைச்சர்கள் இருந்தனர்.

> சிறைக்குச் செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் இருந்தனர். நினைவிடத்தை வலம்வந்து வணங்கிய சசிகலா, நினைவிடத்தின் மீது ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என அவர் சபதம் மேற்கொண்டார். | முழு விவரம் > >சிறை செல்லும் முன் ஜெ. நினைவிடத்தில் சபதம் செய்த சசிகலா>

> சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதி அஸ்வதா நாராயணா முன்பு சரணடைந்தனர். சுதாகரனும் சரணடைந்தார். சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

> டிடிவி.தினகரன் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். | முழு விவரம் > >அதிமுக துணை பொதுச் செயலர் தினகரன் நியமன பின்னணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x