Published : 19 Feb 2017 02:53 PM
Last Updated : 19 Feb 2017 02:53 PM

பினாமி முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல்: ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளே இல்லாத சபையில், பெங்களூரு சிறையில் உள்ள ஊழல் குற்றவாளியின் 'பினாமி' முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜனநாயகத்தில் மக்களின் குரலே மதிப்பு மிக்கது. அவர்களின் தீர்ப்பே மகத்தானது. 'தமிழகத்தில் நடைபெறும் குற்றவாளியின் பினாமி ஆட்சியைத் தடுத்து நிறுத்துங்கள்' என்பதே தமிழக மக்களின் இன்றைய ஒரே குரல் - ஒற்றை நோக்கம். மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அதனைத்தான் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மக்களின் குரலை எதிரொலிப்பதற்கான இடம்தான் சட்டப்பேரவை. அந்த சட்டப்பேரவையை 'ஜனநாயகம் செத்த மன்றமாக', பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது ஆக்கிவிட்டார் ஆளுங்கட்சியின் சபாநாயகர்.

காலையில் தலைமைச் செயலகத்திற்கு செல்லும்போதே ஆளுங்கட்சியும், சபாநாயகரும் என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டன. கூவத்தூர் விடுதி எனும் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் வேறு பக்கம் தாவி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் மனசாட்சிப்படி சுயசிந்தனையோடும், சுதந்திரமாகவும் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காகவும், அமைச்சர்களின் கார்களில் திணிக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

அந்தக் கார்களை தாராளமாக தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுமதித்த காவல்துறையினர், எதிர்க்கட்சியான திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களையும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் கார்களையும் அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரபுரீதியான மரியாதையை தராமல் என்னுடைய வாகனத்தை சோதனையிட்டனர். ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டபடியே திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை நோக்கி நடந்து சென்றோம். தமிழக மக்களின் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதைப் பேரவையில் வலியுறுத்த முயன்றோம்.

சபாநாயகரோ எப்படியாவது இந்த அரசைக் காப்பாற்றி, பெங்களூரு சிறையில் உள்ள சொத்து குவிப்பு ஊழல் குற்றவாளியின் மனதை குளிர்விக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீட்டப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டினார். குற்றவாளியின் வழிகாட்டுதல்படி, 'பினாமி' ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், கூண்டுப் பறவைகளான எம்.எல்.ஏக்களும் பறந்து விடுவதற்கு முன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

திமுக, இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது. அதுபோல தோழமைக் கட்சியினரும், அதிமுக தலைமையை எதிர்த்து தனி அணியாக நின்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவைத் தெளிவாகத் தெரிவித்திருந்தனர்.

'பினாமி' முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் இருப்பவர்கள் உண்மையாகவே ஆதரிக்கிறார்களா, நிர்பந்தத்தால் அந்தப் பக்கம் இருக்கிறார்களா என்ற கேள்வி எங்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடன் இத்தனை காலம் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இருந்தது.

வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் கூட கூவத்தூரில் இருந்துத் தப்பி, தன் சொந்த தொகுதிக்குச் சென்ற, கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் தனது கட்சித்தலைமையை ஏற்கவில்லை என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இன்னும் எத்தனை அருண்குமார்கள் அங்கே சிக்கியிருக்கிறார்களோ என்ற அச்சமும், ஐயமும் வாக்களித்த பொதுமக்கள் மனதில் இருப்பதால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினோம்.

எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முதலில் மைக் தரப்படவில்லை. உண்மைகளை உரைக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகே பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் பேரவை என்பது பெங்களூரு சிறைச்சாலை அல்ல என்பதை சுட்டிக்காட்டி, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால், வாக்கெடுப்பை இன்னொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கே.ஆர்.ராமசாமியும் இதனை வலியுறுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொறடாவான செம்மலையும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜும், 'மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை சந்தித்துத் திரும்பட்டும். அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தலாம்', என வலியுறுத்தினர்.

குதிரை பேரத்திற்கு இடமளிக்காமல், மக்கள் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் கால அவகாசம் தரப்படவேண்டும் என்பதை கழகம் வலியுறுத்தியது. 'பிராக்சி' ஆட்சியை காப்பாற்றத் துடித்த சபாநாயகர், இந்த இரண்டு கோரிக்கைகளையும் புறக்கணித்து, வாக்கெடுப்பை அவசரமாக நடத்தும் முடிவுடன், பேரவையை ஆறு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களை எழுந்து நிற்கும் படி சொன்னார்.

பேரவையில் வாக்கெடுப்பை எப்படி நடத்துவது என்பது சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். அவரை விடவும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்களின் மனதை பிரதிபலிக்க வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகள். அதற்கான சுதந்திரத்தை வழங்கும் வகையில் ரகசிய வாக்கெடுப்போ, மக்களின் மன உணர்வை அறிந்து வரும் வகையில் கால அவகாசமோ வேண்டும் என்பதை திமுக மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.

அதனை சபாநாயகர் முற்றிலுமாகப் புறக்கணித்த நிலையில் தான், அவரது இருக்கையை சுற்றி நின்று திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். ஆனால், சபாநாயகர் எழுந்து செல்வதிலேயே கவனமாக இருந்தார். உள்ளே உள்ள தனது அறைக்குச் சென்றால், தனக்கு செல்போனில் வரும் தொலைதூரக் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்பட்டு, 'பினாமி' ஆட்சியைக் காப்பாற்றி விடலாம் என்பது தான் அவரது திட்டம்.

அதற்கு அனுமதிக்காமல், திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். அதில் தான் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவையை பகல் ஒரு மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்த நிலையில், அவரை நேரில் சந்தித்து, நடந்த நிகழ்வுகளுக்காக என் வருத்தத்தைத் தெரிவித்து, 'திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் என்ற முறையில் அதற்கான பொறுப்பினையும் ஏற்கிறேன்', எனத் தெரிவித்தேன். அப்போது தனது சட்டை கிழிந்ததாகவோ, வேறு அசம்பாவிதம் நடந்ததாகவோ சொல்லாத சபாநாயகர், பிறகு ஊடகங்களிடம் தன் சட்டை கிழிந்திருப்பதாகக் காட்டுவதைப் பார்த்தபோது, நடுநிலையாக செயல்படவேண்டிய சபாநாயகர், ஒரு தரப்புக்கு சார்பாக செயல்படும் வகையில், வேண்டுமென்றே தன் சட்டையைக் கிழித்துக் கொண்டு நிலைதவறிய அரசியல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பதாகவே தோன்றியது.

இந்த நிலையில், மீண்டும் பேரவை கூடியபோது எதிர்க்கட்சியினரின் இரண்டு கோரிக்கைகளில் எதையும் ஏற்காமல், கூவத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சுதந்திரம் தராமல் வாக்களித்து, பினாமி ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கமே சபாநாயகரிடம் வெளிப்பட்டது. அதனை எதிர்த்து பேரவைக்குள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டோம். வழக்கத்திற்கு மாறாக, அவைக் காவலர்கள் அதிக அளவில் இருந்தனர். பேரவை பணியில் இல்லாத பிற பணிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களின் காக்கி சீருடைக்குப் பதில் சபைக்காவலர்களின் வெள்ளை உடையில் மாறுவேடத்தில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நேரத்தில் வெளியில் சென்று திரும்பிய திமுகவின் ஒரு சில சட்டப்பேரவை உறுப்பினர்களையும் காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எங்களை சபைக் காவலர்களும், அவர்களின் உடையில் உள்ளே அனுப்பப்பட்டிருந்த காவல்துறையினரும் மிக மோசமான முறையில் செயல்பட்டு, பிடித்து இழுத்து, சட்டையைக் கிழித்து, தாக்குதல் நடத்தி, ஷூ காலில் மிதித்து வெளியே தூக்கிப் போட்டார்கள்.

இந்த அராஜகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த ஊடகத்தினரின் முன் நான் அம்பலப்படுத்த வேண்டியதாயிற்று. திமுக உறுப்பினர்கள் மீது நடந்த தாக்குதலையும், வெளியேற்றுதலையும் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு, எதிர்க்கட்சிகளே இல்லாத சபையில், ஆளுங்கட்சியின் இரண்டு அணிகள் மட்டுமே இருந்த நிலையில், வாக்கெடுப்பு என்ற ஓரங்க நாடகம் நடத்தி, அதில் பெங்களூரு சிறையில் உள்ள ஊழல் குற்றவாளியின் 'பினாமி' முதல்வர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்திருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

இதனைக் கண்டித்தும், மூன்றில் ஒரு பங்குக்கு மேல் பலமுள்ள உறுப்பினர்களைப் புறக்கணித்து விட்டு நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு செல்லாது என்றும் தமிழக பொறுப்பு ஆளுநரை திமுகவின் கழகத்தின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்று சந்தித்து மனு அளித்தேன்.

மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டப்பேரவையில் குற்றவாளிகளின் குரல் எதிரொலிப்பதை பொதுமக்களிடம் சுட்டிக்காட்டும் வகையில் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக அறப்போராட்டத்தைத் தொடங்கினோம் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அதில் பங்கேற்றனர். அவர்களின் பேராதரவுக்கிடையே கைது செய்யப்பட்டு, மக்கள் கடல் அலையில் மிதந்தபடி மண்டபத்தில் சிறைப்படுத்தப்பட்டோம்.

இத்தனை அராஜகங்களும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், பேரவையில் தன்னிச்சையான வாக்கெடுப்பையும், எதேச்சதிகரமான வெற்றியையும் அறிவித்த சபாநாயகர் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு, அதை இழிவுபடுத்தும் நோக்கில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அனுதாபம் தேட முனைந்தார். அவர் உள்ளிட்ட அவையில் இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் சுதந்திரமான கருத்து வெளிப்படவேண்டும் என்பதால்தான் ரகசிய வாக்கெடுப்பை திமுகவும், தோழமைக் கட்சியினரும் வலியுறுத்தினார்களே தவிர, சமூகரீதியில் இழிவுபடுத்தும் எண்ணம் சமூக நீதிக்காக சளைக்காமல் போராடும் திமுகவுக்கு ஒரு போதும் கிடையாது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, பழங்குடியினருக்கு தனியாக 1% தந்தது திமுக ஆட்சிதான். அருந்ததிய சமுதாய மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசுதான் என்பதுடன், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியானவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை துணை முதல்வராக இருந்தபோது நானே வழங்கியிருக்கிறேன் என்பதையும் சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆனால், அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை, ஆணவப் படுகொலைகள் குறித்து பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதித்தாரா? ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளித்தாரா? இப்போது அவர் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தி வந்தது யாரென்பதை!

மெரினா அறப்போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நான் நேராகச் சென்ற இடம், கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினரான வழக்கறிஞர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் உடல்நலன் விசாரிக்கத்தான்! சபை காவலர்கள் உடையில் வந்த காவல்துறையினரின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவரை சந்தித்து நலன் விசாரிக்க வந்தேன்.

தனித் தொகுதியான எழும்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரைத்தான் சபாநாயகரின் உத்தரவுப்படி, வெளியேற்றம் என்ற பெயரில் தாக்கியிருக்கிறது காவல்துறை. இதுதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீதான சபாநாயகரின் அக்கறையா?

ஜனநாயக கடமையை ஆற்றத் தவறி, சட்டப்பேரவையின் மாண்புக்கு எதிராக செயல்பட்டு, 'பினாமி' ஆட்சியைக் காப்பாற்ற முனைந்ததை திசைதிருப்பும் வகையில் சபாநாயகர் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறுகிறார். அதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, இந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் ஏற்புடையதல்ல என்பதை சட்டரீதியாகவும் மக்களிடமும் எடுத்துச் சொல்லி போராட்டங்களை மேற்கொள்ள திமுக தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

சட்டப்பேரவை விதிகளின்படி, ஒரு முறை நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதனை முன்மொழிய 6 மாதகால அவகாசம் வேண்டும். ஆனால், பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டபோது, இரண்டு முறை அந்தத் தீர்மானத்தை 'பினாமி' முதல்வர் முன்மொழிந்தார். இதுவே சட்டமீறலாகும். பேரவை விதிகளின்படி, இந்தத் தீர்மானம் செல்லாது. செல்லாத தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கத்தல்ல.

இவற்றையெல்லாம் ஆளுநரிடம் எடுத்துரைத்து இருப்பதுடன், நீதிமன்றங்கள் வாயிலாகவும் நீதி தேடும் பணியை திமுக மேற்கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலானது, மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை நோக்கி நாம் பயணிப்போம். சட்டப்பேரவையின் கறுப்பு நாள் அவலங்களை – அராஜகங்களை - 'பினாமி' ஆட்சியின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்துரைப்போம். அவர்களை ஒருங்கிணைப்போம்.

அவலக் கறுப்பை அகற்றி விடியல் சிவப்பைக் கொண்டு வந்து தமிழகத்தை வெளிச்சமாக்க அணி திரள்வோம். அடுத்தடுத்த போராட்டங்களுக்கு ஆயத்தமாவீர். 'பினாமி' ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x