Published : 17 Sep 2014 10:20 AM
Last Updated : 17 Sep 2014 10:20 AM

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த முதல்வருக்கு ஆவின் பரிந்துரை

தனியாருடன் போட்டியிட முடியாத நிலையில், பால் கொள்முதல் நாளுக்குநாள் சரிவதைத் தடுக்க லிட்டருக்கு ரூ.5 விற்பனை விலையையும், ரூ.3 கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என ஆவின் நிர்வாகம் தமிழக முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் பால் கொள்முதல், விற்பனையில் ஆவின் முதலிடத்தில் உள்ளது. 11,503 சங்கங்கள், 17 மாவட்ட ஒன்றியங்கள் மூலம் தினசரி 23.72 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. இதில் சென்னை நகரில் 11.34 லட்சம் லிட்டர், இதர மாவட்டங்களில் 9.91 லட்சம் லிட்டர் பாலை தினசரி விற்பனை செய்கிறது. தமிழகத்தின் ஒரு நாள் பால்தேவை 1.5 கோடி லிட்டர். இதில் ஆவின் பங்கு 17 சதவீதம் மட்டுமே. மீதியை தனியார் பால் நிறுவனங்கள், வீதி, வீதியாக பால் விற்போர்தான் பூர்த்தி செய்கின்றனர்.

ஆவின், உற்பத்தியாளர்களிட மிருந்து ஒரு லிட்டர் பாலை அதன் கொழுப்பு சத்துக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.22.90-க்கு கொள்முதல் செய்கிறது. இதை மக்களுக்கு ரூ.30 முதல் 35 வரை விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்கள் ஆவினைவிட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை கூடுதலாக கொடுத்து கொள்முதல் செய்கின்றன.

மேலும், முன்தொகை, பால் கறந்த அடுத்த நிமிடத்தில் அதன் கொழுப்பு சத்து சரிபார்ப்பு என பல்வேறு வசதிகளை தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன. இதனால் கிராமப்புற கூட்டுறவு சங்கங்களுக்கு பால் ஊற்றுவதை மக்கள் படிப்படியாக குறைத்துக்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர்.

தேனி மாவட்டத்திலிருந்து அதிகளவில் கேரளத்துக்கு பால் செல்கிறது. ஓசூர் உள்ளிட்ட கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பால் உற்பத்தியாளர்கள் அம்மாநிலத்துக்கே சென்று பாலை விற்றுவிடுகின்றனர்.

தனியாரின் கூடுதல் விலை

தமிழகத்தைவிட இம்மாநிலங் களில் லிட்டருக்கு கூடுதலாக குறைந்தபட்சம் ரூ.5 அதிகம் கிடைக்கிறது. தனியார், வெளி மாநிலங்கள் பக்கம் பால் உற்பத்தியாளர்கள் சாய்ந்து விட்டதால் ஆவின் கொள்முதல் படிப்படியாக சரிந்து வருகிறது. 2012-13-ல் 24.36 லட்சம் லிட்டராக இருந்த தினசரி கொள்முதல் தற்போது 23 லட்சம் லிட்டராக சரிந்துவிட்டது. ஆவின் திட்டப்படி 30 லட்சம் லிட்டராக பால் கொள்முதல் உயர்ந்திருக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் மட்டும் இதுவரை 36 ஆயிரம் மாடுகளை அரசு வாங்கிக்கொடுத்துள்ளது. இதன் மூலம் மட்டும் தினசரி குறைந்தது 3.60 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பெருகியிருக்க வேண்டும். ஆனால் ஆவினுக்கு இந்த பால் வந்து சேரவில்லை. இதற்கு ஒரே காரணம் தனியாரின் கூடுதல் விலைதான்.

ஆவின் பால் தட்டுப்பாடு பல மாவட்டங்களில் வந்துவிட்டது. சென்னை ஆவினில் ஒரு லிட்டர் பால் கூட உற்பத்தியாகாத நிலையில், சேலம், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஒன்றியங்களிலிருந்து வரும் பால்தான் சென்னையில் விற்கப் படுகிறது. நாளுக்கு நாள் பால் வரத்து குறைவதால் சென்னைக்கு பால் அனுப்புவதை ஒன்றியங்கள் குறைத்து வருகின்றன. இதனால் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதை தவிர்க்க விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.5, கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த வேண்டும் என முதல்வருக்கு ஆவின் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆவின் நிலை மிக மோசமாக உள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதை தவிர்க்க லிட்டருக்கு ரூ.5 குறைந்தபட்சம் விலையை உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஆவின் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றவும் முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x