Published : 21 Oct 2014 07:30 PM
Last Updated : 21 Oct 2014 07:30 PM

பாரிமுனை, ராயபுரம், புரசையில் களை கட்டிய தீபாவளி விற்பனை- கொட்டும் மழையிலும் அலை மோதும் மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பண்டிகைக் கால விற்பனை சூடுபிடித்துள்ளது. அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி யுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பண்டிகைக் கால முன் தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

சென்னையில் தி.நகர் மட்டுமின்றி மற்ற மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 3 தினங்களாக இடைவிடாமல் மழை கொட்டும் நிலையிலும், தீபாவளி விற்பனை நேற்று சூடுபிடித்தது. காலையில் மந்தமாக இருந்த விற்பனை நண்பகல் முதல் களை கட்டியது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, ஈவ்னிங் பஜார் சாலை, பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, சேலைகளின் மொத்த மார்க்கெட்டான குடோன் தெரு, தங்க நகைக் கடைகள் மற்றும் அனைத்து வித பொருட்களும் கிடைக்கும் காசி செட்டித்தெரு உள்ளிட்டவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.

பூக்கடை போலீஸார் ஆங்காங்கே சாலையோரங்களில் தடுப்புக் கம்பிகள் வைத்து, கூடுதல் போலீஸார் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். என்.எஸ்.சி.போஸ் சாலை, பிராட்வே பேருந்து நிலைய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கின்றனர்.

வடசென்னை மக்களுக்கு ஜவுளித் துணிகளுக்கு முக்கிய சந்தையாக விளங்கும் ராயபுரம் சுழல் மெத்தைப் பகுதி, எம்.சி.சாலை பகுதிகளில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் புதிய வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை சாலைகளிலும் தீபாவளிப் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

மத்திய சென்னை மக்களின் முக்கிய வணிகப் பகுதியான புரசைவாக்கத்திலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. புரசைவாக்கம் தாணா தெரு, புரசை நெடுஞ்சாலை, வாட்டர் டேங்க் பகுதியில் ஜவுளி விற்பனை களை கட்டியுள்ளது. நெரிசலான பகுதிகளில் வாகனங்கள் ஒரு வழிப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

பாரிமுனையில் மட்டும் பட்டாசு விற்பனைக்கு தடை

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பட்டாசு விற்பனைக்கு பாரிமுனையில் தடை விதிக்கப்பட்டு, சென்னை தீவுத்திடல் மைதானத்தில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. இதற்காக தமிழக சுற்றுலாத் துறை சார்பில், பட்டாசு விற்பனைக் கடைகள் தனியார் மூலம் அமைக்கப்பட்டு, பட்டாசு விற்பனை நடக்கிறது. வழக்கமாக பாரிமுனை மலையப் பெருமாள் கோயில் தெரு, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு ஆகிய தெருக்களில் பட்டாசு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்தப் பகுதி ஏற்கெனவே நெரிசல் மிக்கது என்பதால், அங்கு பட்டாசுக் கடை அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x