Last Updated : 27 Aug, 2014 11:57 AM

 

Published : 27 Aug 2014 11:57 AM
Last Updated : 27 Aug 2014 11:57 AM

பாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது புகாரும், பாராட்டும்: பகடைக் காய்களாக்கப்படுகிறார்களா பேராசிரியர்கள்?

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது நிர்வாகம் மற்றும் நியமனங்கள் தொடர்பாக ஊழல் புகார்களை தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகிறது. இந் நிலையில், பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருவதாகக் கூறி துணைவேந்தருக்கு பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பாராட்டு விழா நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. துணைவேந்தர் குறித்து இரு சங்கங்களுக்கு இடையே மோதல் முற்றி வரும் நிலையில் அடுத்து என்ன நடைபெற உள்ளது எனப் புரியாத புதிரில் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம் மீது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தது. பலதரப்பட்ட எதிர்ப்பு இருந்தபோதும் பல்கலைக்கழகம், தனிப்பட்ட நபருக்கு தொலைதூரக் கல்விக் குழுமங்களை அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆளுநர், முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.

தொடர்ந்து, பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்றுள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம், 2-வது வாரத்தில் உண்ணாவிரதம், 3-வது வாரத்தில் ஊர்வலம் நடத்த உள்ளதாக பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இந் நிலையில், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வில், உரிய ஆவணங்கள் இருந்தும் தனது விண்ணப்பத்தை புறக்கணித்துவிட்டு, பணத்தைப் பெற்று வேறு ஒருவரைப் பணியில் சேர்த்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மீது திண்டுக்கல்லைச் சேர்ந்த மயில்தேவி என்ற பெண் கோவை ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.

மற்றொருபுறம் பல்கலைக்கழக இயக்குநர், பேராசியர் ஆகிய பொறுப்பிலும் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர் சங்கம் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராட்டு விழா

பல்கலைக்கழக நிர்வாகம் மீது அடுக்கடுக்காகப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அவை உண்மைக்குப் புறம்பானவை. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் சில அமைப்புகள் செயல்படுவதாக துணைவேந்தர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டத்தை நடத்த உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதாகக் கூறி துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சைக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த 32 ஆண்டுகளில் எத்தனையோ துணைவேந்தர்கள் பதவி வகித்திருந்தாலும் பல்கலைக்கழக வளர்ச்சியில் தற்போது பதவியில் உள்ள துணைவேந்தருடைய பங்களிப்பு மிகவும் அளப்பரியது. பல்கலைக்கழகத்தை இரு ஆண்டுகளில் முற்றிலுமாக மாற்றிவிட்டார். அதற்காக செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு, ஒருபுறம் உள்ள ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மறுபுறும் உள்ள ஆசிரியர் சங்கம் பாராட்டு விழா நடத்த இருப்பதால் பல்கலைக்கழக மாணவர்களும், கல்வியாளர்களும் நடப்பதை அறியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டிய பல்கலைக்கழகம் திசைமாறி பயணிப்பதாகக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழக அரசு உடனே தலையிடாவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என எச்சரிக்கை செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x