Published : 21 Oct 2014 05:05 PM
Last Updated : 21 Oct 2014 05:05 PM

பாரத ரத்னாவை இழிவுபடுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டிப்பு

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியிருப்பது, அவ்விருதை இழிவுபடுத்தும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய - மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தைக் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காகவும் இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச் செயலர் வைகோவும், பாமக நிறுவனர் ராமதாஸும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பாஜகவுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர, தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து, விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழ் நாட்டில் சாதிக் கலவரங்களைத் தூண்டி விடும் நோக்கோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், சுதந்திரப் போராட்ட கால தியாகத்தைப் பாராட்டி, அதன் அடையாளமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகு, துதிபாடுகிற சாக்கில் சாதியத் தீயை மூட்டி விட முயல்கிறார். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன், இவரது மாய்மாலப் பிரச்சாரத்திற்கு தமிழக மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று அவர் கேடுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x