Published : 22 Oct 2016 12:08 PM
Last Updated : 22 Oct 2016 12:08 PM

பழைய வேட்பாளர்களையே களம் இறக்கும் திராவிடக் கட்சிகள்: ராமதாஸ் தாக்கு

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை. தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் துடிக்கிறது. இருகட்சிகளும் அதற்குத் தயாராக பழைய வேட்பாளர்களையே களமிறக்கி உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சித் தலைமைகள் அறிவித்துள்ளன.

நேர்மை, தியாகம், சுயமரியாதை, தலைவணங்காமை ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி, தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் செயல்களில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய வரலாற்றில் வாக்குகளை விலைக்கு வாங்கியதற்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகள் என்ற அவப்பெயரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் பெற்றன. இந்த அவப்பெயரை தமிழகத்திற்கு வாங்கித் தந்த பெருமை தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கும் அதிமுக, திமுகவையே சேரும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என்றும், அத்தகைய சூழல் ஏற்பட்ட பிறகு தான் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறி தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் ஆணையம், களநிலையில் எந்த மாற்றமும் நிகழாத நிலையில், அத்தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் வாக்குகளை விலை கொடுத்து வாங்கிய இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையைக் கூட தேர்தல் ஆணையத்தால் நிறைவேற்ற முடியவில்லை. மாறாக ஜனநாயகத்தைக் காயப்படுத்திய இரு தொகுதிகளின் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடத் தடை இல்லை என்று அறிவித்தது.

அதிமுகவும், திமுகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை திரும்பப்பெற்று ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வேட்பாளர்களை அறிவிக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அந்தக் கட்சிகளின் தலைமைகளோ, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தகுதியும், திறமையும் இரு தொகுதிகளுக்கும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்குத் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை நிறுத்தப்பட்ட சாதாரண மனிதர்களுக்கு பதிலாக செல்வாக்கு படைத்தவர்களையே இரு கட்சிகளும் களமிறக்கியுள்ளன. ஒருவகையில் பார்த்தால் இதில் அதிர்ச்சியடைவதற்கோ, ஆச்சர்யப்படுவதற்கோ எதுவும் இல்லை. வாக்குகளை விலைக்கு வாங்கும் கலையை கற்றுக் கொடுத்த கட்சிகளின் தலைமைகளே, அக்கலையில் வல்லமை பெற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கும் என்று எதிர்பார்த்தால், அது எதிர்பார்ப்பவரின் அறியாமை மற்றும் தவறு தானே.

ஆட்சியாளர்களின் ஆறு மாத கால ஆட்சித் திறன், வேட்பாளர்களின் தகுதி மற்றும் திறமை, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் உறுதி ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெற வேண்டிய 3 தொகுதிகளின் தேர்தல், ரூ.5000 கொடுக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா... அல்லது ... ரூ.10,000 கொடுக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்ற விவாதத்திற்குரியதாக மாறியிருக்கிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகி அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.77 கோடி பணமும், ரூ.1.30 கோடிக்கு வேட்டி-சேலைகள் வாங்கப்பட்டதற்கான குறிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன் சிவராமனின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1.98கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இந்த தொகுதியில் மட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 1525 லிட்டர் மதுவும் சிக்கியது.

அதற்கு சற்றும் குறையாமல் தஞ்சாவூரில் உள்ள முத்து லாட்ஜில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் உட்பட மொத்தம் 25.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 13 வட்டங்களில் உள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1.40 கோடி பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிடிபட்டன. அந்த வகையில் மொத்தமுள்ள 51 வட்டங்களிலும் ரூ.6 கோடி வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆணையமே தெரிவித்தது. அதுமட்டுமின்றி, தஞ்சாவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2145 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது.

இரு தொகுதிகளிலும் முதல்கட்டமாக ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட சூழலில் அரவக்குறிச்சியில் ரூ.5.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்ற சூழலில் நடந்தவை.

இப்போது மொத்தம் 3 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலர்கள், 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 15-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் முகாமிடுவார்கள். திமுக சார்பில் தலா 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பெரும்படையே முற்றுகையிடும்.

கடந்த தேர்தலில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி செலவிடப்பட்டு இருந்தால் இம்முறை ரூ.25 கோடி வரை வாரி இறைக்கப்படும். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த மிக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களும், துணை ராணுவப்படைகளும் தேவை. ஆனால், ஆணையமோ தொகுதிக்கு இரு பார்வையாளர்களை மட்டும் அனுப்பும். அதற்கு நடுவில் 3 பேரவை தொகுதிகளிலும் தேர்தல் என்ற சடங்கு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் துடிக்கிறது. இருகட்சிகளும் அதற்குத் தயாராக பழைய வேட்பாளர்களையே களமிறக்கி உள்ளன. மொத்தத்தில் நவம்பர் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஜனநாயகம் மீண்டும் ஒருமுறை படுகொலை செய்யப்படவிருக்கிறது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x