Published : 27 Feb 2015 10:59 AM
Last Updated : 27 Feb 2015 10:59 AM

பழைய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை - தொழிற்சங்கத்தினர் அதிருப்தி

இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் 5,500 ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன. ஆனால், உற்பத்தியாவதோ 3,200 பெட்டிகள்தான். இந்த தட்டுப்பாட்டை போக்கத்தான் கடந்த ஆட்சியில் பாலக்காடு (கேரளம்), கோலார் (கர்நாடகம்), ராய்பரேலி (உ.பி.) ஆகிய நகரங்களில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதிய ரயில்களை அறிவிக்காததற்கு போதிய ரயில் பெட்டிகள் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் கட்டணம் மூலம் ரூ.44 ஆயிரத்து 645 கோடி வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.43 ஆயிரம் கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது. இதனால், மேலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. போதிய ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு இல்லை, தமிழகம் போன்ற மாநிலங்களில் கிடப்பிலுள்ள முக்கியமான ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புதிய ரயில்களும் அறிவிக்கவில்லை என்பதால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது’’ என்றார்.

எம்ஆர்டிஎஸ் திட்டம்

எஸ்ஆர்இஎஸ் பொதுச் செயலாளர் பி.எஸ்.சூர்யபிரகாஷ் கூறுகையில், ‘‘கடந்த 30 ஆண்டுகளாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களும், புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டம் பெரும்பகுதி நிறைவடைந்துவிட்டது.

மீதமுள்ள பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டால் விரைவில் நிறைவடையும். ஆனால் நிதி ஒதுக்கப்படாமல் 18 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை – மகாபலிபுரம் – கடலூர் ரயில் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ரயில் பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x