Published : 20 Oct 2014 03:06 PM
Last Updated : 20 Oct 2014 03:06 PM

பருவமழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையினால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (20.10.2014) வடகிழக்கு பருவ மழையினால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறையின் சாலைகளை பழுதுநீக்கம் செய்வது போக்குவரத்து இடையூறுகளை கலைவது தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் தலைமைப் பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "வடகிழக்கு பருவமழையினால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க வேண்டும்.

சென்னை மாநகரில் உள்ள 18 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காவண்ணம் அப்புறப்படுத்தும் வகையில் 66 மின் மோட்டார்கள், 42 டீசல் மோட்டார்கள் ஆக மொத்தம் 108 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் பத்து 2.ஹெ.பி நடமாடும் மோட்டார்கள் மூலம் அகற்றப்படுகிறது. சென்னை மாநகர் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 360 கி.மீ. நீளச்சாலைகளிலும் 20 நபர்கள் கொண்ட 30 குழுக்கள் அமைத்து போக்குவரத்து தடைபடாவண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர அலகில் நடைபெறும் திருமங்கலம் மற்றும் மூலக்கடை உயர்மட்டபாலப்பணிகளில் சேவைச்சாலைகள்யாவும் செப்பனிடப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சீராக சென்றுகொண்டிருக்கிறது.

மழை வெள்ளத்தினால் சாலைகளில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் பணியாளர்கள் மூலமாக அப்புறப்படுத்துவதற்கும், சாலைகளில் ஏற்படும் அரிப்புகளை தடுப்பதற்கு சீரியமுறையில் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பருவமழையினால் கால்வாய்களில் மழைநீர் விரைந்து செல்வதற்கு ஏதுவாக பணியாளர்களை கொண்டு கண்காணிக்கும்படியும், தரைப்பாலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், மலைப்பிரதேச சாலைகளில் மண் சரிவுகள், மரங்கள் விழுந்துவிட்டால் உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து இடையூறின்றி செல்வதற்கு அனைத்து பணியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க பொறியாளர்களுக்கு அறிவுறத்தப்படுகிறது" என அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x