Published : 22 Nov 2014 12:08 PM
Last Updated : 22 Nov 2014 12:08 PM

பருப்பு கொள்முதல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தயாரா?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி

பருப்புக் கொள்முதலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று ஆட்சியாளர்கள் நம்பினால் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக உளுந்து மற்றும் துவரம்பருப்பு என்ற பெயரில் வழங்கப்படும் மசூர் பருப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

வெளிச்சந்தையின் விலையை விட அதிக விலைக்கு உளுந்தும், மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்பட இருப்பதால் அரசுக்கு மொத்தம் ரூ. 730 கோடி இழப்பு ஏற்படும் என்பதையும் அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.

சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு வகைகளை ஒப்பந்தப்புள்ளி கோரி கொள்முதல் செய்வதன் நோக்கமே வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்பது தான்.

பருப்பு கொள்முதல் முறையாக நடந்திருந்தால் வெள்ளிச்சந்தையில் பருப்பு விலை என்ன? அரசு கொள்முதல் செய்துள்ள பருப்பு வகைகளின் விலை என்ன? என்பதையும், இதனால் அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது என்பதையும் அரசின் சார்பில் முதலமைச்சரோ அல்லது உணவுத் துறை அமைச்சரோ விளக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அரசின் நேர்மையையும், அமைச்சர்களின் நேர்மையையும் மக்கள் பாராட்டியிருப்பர்.

ஆனால், இந்த விளக்கத்தை அளிக்காத உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மொட்டையாக கூறிவிட்டு, அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றஞ்சாற்றியிருப்பதாகக் கூறி, அதற்காக என்மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படியே சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சரின் சார்பில் என் மீது நேற்று அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பருப்பு ஊழல் குறித்து இனி எவரும் பேசக்கூடாது; இதுகுறித்த செய்திகளை இனி ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை.

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தின்படி தான் பருப்பு கொள்முதல் நடப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த நடைமுறையே மோசடியானது என்பது தான் எனது குற்றச்சாற்று ஆகும். 15.03.2014 அன்று கோரப்பட்டு 15.04.2014 வரை நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் ராசி நியூட்ரி ஃபுட்ஸ், கிறிஸ்டி ஃபிரைடு கிராம், அப்பு ஃபுட்ஸ், பி.இ.சி நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், இவற்றில் அப்பு ஃபுட்ஸ், பி.இ.சி நிறுவனம் ஆகியவற்றின் ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள இரு நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறியிருக்கிறார்.

ஒப்பந்தப்புள்ளி வழங்கிய 4 நிறுவனங்களில் பி.இ.சி. நிறுவனம் தவிர மீதமுள்ள 3 நிறுவனங்களும் ஒரே குழுமத்திற்கு சொந்தமானவை ஆகும். இந்த உண்மை தமிழக ஆட்சியாளர்களுக்கும் தெரியும். எனினும், ‘ஏதோ ஒரு நன்றிக் கடனுக்காக’ இந்த குழுமத்திற்கு பருப்பு வினியோக ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதற்குச் சொந்தமான 3 நிறுவனங்களும், அவற்றுடன் ஒரு சொத்தை நிறுவனமும் பங்கேற்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளி நடைமுறை நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இவற்றைவிட குறைந்த விலையில் பருப்பு வகைகளை வழங்க பல நிறுவனங்கள் தயாராக இருந்த போதிலும், அவை இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் பங்கேற்க முடியாத வகையில் திட்டமிட்டு தந்திரமாக விரட்டியடிக்கப்பட்டு விட்டன.

இறுதிகட்ட பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் இரு நிறுவனங்களுமே ஒரே குழுமத்திற்கு சொந்தமானவை என்பதால் யாருக்கு ஒப்பந்தம் கிடைத்தாலும் அதனால் அக்குழுமத்திற்கு தான் லாபம். அதனால் இந்த நடைமுறையே மோசடியானது என்று குற்றஞ்சாற்றுகிறேன். ஒரே குழுமத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களை பங்கேற்க அனுமதித்துவிட்டு மற்ற நிறுவனங்களை விரட்டியடிப்பது தான் ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளி நடைமுறையா? என்பதை அமைச்சர் தான் விளக்க வேண்டும்.

பருப்பு கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் இறுதிகட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இரு நிறுவனங்களில் ஒன்றான கிறிஸ்டி ஃபிரைடு கிராம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.

இதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான குமாரசாமி, சுப்பிரமணி உள்ளிட்டோர் மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 18.03.2013 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் இந்த நிறுவனம் அளித்த ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன? பின்னணியில் என்ன நடந்திருக்கும்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு குடிமக்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதற்கு முன்பாக 22.03.2013 அன்று ஒரு டன் ரூ. 44,000 என்ற விலையில் மசூர் பருப்பும், ரூ.45,700 என்ற விலையில் உளுந்தும் வாங்கப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டதற்கு பிறகு 09.05.2013 அன்று ஒரு டன் ரூ. 42,950 என்ற விலையில் மசூர் பருப்பும், ரூ.48,537 என்ற விலையில் உளுந்தும் வாங்கப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது இரு தேதிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு டன் மசூர் பருப்புக்கு முறையே ரூ.75,000, ரூ.85,000, ஒரு டன் உளுந்துக்கு முறையே ரூ.89,000, ரூ.99,000 என விலைப்புள்ளி கொடுத்துள்ள ராசி நியூட்ரி ஃபுட்ஸ், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க தமிழக அரசு துடிப்பது ஏன்? என்பதை தமிழக முதலமைச்சரும், உணவு அமைச்சரும் தான் விளக்க வேண்டும்.

இவ்வளவுக்குப் பிறகும் பருப்புக் கொள்முதலுக்கான நடைமுறை ஒளிவுமறைவின்றி நேர்மையாகத் தான் நடக்கிறது என்று தமிழக அரசு சாதிக்க முயல்வது மக்களை முட்டாள்களாக்கும் செயலாகும்.

ஒருவேளை பருப்புக் கொள்முதலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று ஆட்சியாளர்கள் நம்பினால் இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டு தங்களை குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும். இதை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் தயாரா?" இவ்வாறு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x