Published : 05 Mar 2015 03:52 PM
Last Updated : 05 Mar 2015 03:52 PM

பட்ஜெட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

தமிழக பட்ஜெட்டில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' மத்திய அரசு புதிதாக அறிவித்திருக்கும் ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்! பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்!’ திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் நூறு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் கடலூர் மாவட்டமும் ஒன்று.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலான பெண்குழந்தைகளின் சராசரி பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் குறைவாக உள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து சிறப்பு நடவடிக்கை எடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால் 2011ஆம் ஆண்டில் அது 896 ஆகக் குறைந்துவிட்டது.

கடலூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும்கூட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. இந்த மாவட்டங்கள் கல்வி பொருளாதார மட்டங்களில் பின் தங்கியே உள்ளன. அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம்.

பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தேசிய சராசரியைவிட தமிழக சராசரி அதிகம்தான் என்றாலும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது கவலைக்குரியதாகும். இதைச் சரிசெய்ய மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அது போதுமானதல்ல.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான குறிப்பான காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்களைக் கண்டறிந்தால்தான் அதைச் சரிசெய்ய முடியும்.

கடலூர் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டின் வேறு சில மாவட்டங்களில் இருப்பதுபோல இங்கே பெண் சிசுக்கொலை அதிகமாக இருக்கிறது எனக் கூற முடியாது. சுனாமி வந்ததால் பெண் சிசுக்களின் என்ணிக்கை குறைந்துவிட்டது என ஒரு அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுவும் ஏற்கத்தக்க காரணம் அல்ல. எனவே இந்த மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தை அதிகரிக்கவும், படிப்பறிவு விகிதத்தை அதிகரிக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும். பெண்களுக்கான பள்ளிகளையும் மகளிர் கல்லூரிகளையும் இந்த மாவட்டங்களில் புதிதாகத் தொடங்கவேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெண்களுக்கான பள்ளிகளை, கல்லூரிகளை, தொழிற்கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x