Published : 29 Mar 2015 12:12 PM
Last Updated : 29 Mar 2015 12:12 PM

நீதித் துறை சிறப்பாக செயல்பட வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அவசியம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து வலியுறுத்தல்

வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஜனநாயகத்தின் 3-வது தூணான நீதித் துறை சிறப்பாக இயங்க முடியும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறினார்.

மெட்ராஸ் பார் அசோசியே ஷனின் 150-வது ஆண்டு நிறைவு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கலந்துகொண்டார். நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டின் மிகச் சிறந்த நீதிபதிகள், வழக்கறிஞர்களை உருவாக்கிய பெருமை மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கு உண்டு. இம்மாநிலத்தைச் சேர்ந்த நீதித் துறை வல்லுநர்கள் சமுதாயத்துக்கு உகந்த பல்வேறு சட்டங்களை இயற்ற உறுதுணையாக இருந்துள்ளனர்.

ஜனநாயகத்தின் 3-வது தூணாக நீதித் துறை வர்ணிக்கப்பட்டாலும், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதனால் இயங்க முடியாது. பாதிக்கப்பட்டவர் களுக்காக நீதித் துறை குரல் கொடுக்கவேண்டும் என்பதே சமுதாயத்தின் தற்போதைய எதிர்பார்ப்பு. கொடுமைகளைக் கண்டு நீதித் துறையினர் அமைதி யாக இருப்பது நீதித் துறையின் அடித்தளத்தையே சிதைப்பது போன்றது. நீதித் துறையை அர்த்தம் உள்ளதாக மாற்ற நீதியரசர் களும், வழக்கறிஞர்களும் கூட்டாக பாடுபடவேண்டும். நீதிமன்றங் களில் தேங்கிக் கிடக்கும் வழக்கு களை துரிதமாக முடிக்க கூட்டாக முயற்சிக்கவேண்டும்.

இவ்வாறு எச்.எல்.தத்து கூறினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:

எந்த காரணமும் இல்லாமல் நீதி கிடைப்பது தாமதமானால், அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரான கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றை பொதுமக்கள் நாடுகின்றனர். அங்கு ஏற்படும் பிரச்சினைகளும் கடைசியில் நீதிமன்றத்துக்குதான் வருகின்றன. இதனால் நீதிமன்றங்களுக்கு மேலும் பளு கூடுகிறது.

இதை சரிசெய்ய வேண்டிய முக்கிய கடமை நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு உள்ளது. நீதி கிடைப்பதற்கான கட்டமைப்புகள் சரியில்லாமல் இருந்தால், நீதித் துறையை எதிர்த்து மக்கள் வெகுண்டெழும் நிலைகூட ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இடையே ஒரு வரம்புடன் கூடிய நல்லுறவு அவசியம்.

இவ்வாறு எஸ்.கே.கவுல் கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி, மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி, செயலர் வி.ஆர்.கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x