Published : 26 Feb 2017 11:28 AM
Last Updated : 26 Feb 2017 11:28 AM

நியாயவிலைக் கடைகளில் பாமாயில் பருப்பு வழங்குவதை நிறுத்தக்கூடாது: ராமதாஸ் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகளும், பாமாயிலும் வழங்குவது நிறுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசின் இச்செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறப்பு பொது வினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ரூ.30, பாமாயில் ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆனால், இத்திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் வரை 40 விழுக்காடு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டு வந்த இந்த பொருட்கள் இம்மாதத்தில் ஒருவருக்குக் கூட வழங்கப்படவில்லை. அதேபோல், மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக 10 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நியாயவிலைக்கடைகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தற்காலிக ஏற்பாடாகவே தொடங்கப்பட்டது என்றாலும், காலப்போக்கில் இது தவிர்க்க முடியாததாகி விட்டது. இது தற்காலிகத் திட்டம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அரசாணை மூலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. அதன்பின் இத்திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் முழுமையாக நீட்டிக்கவில்லை. மாறாக இத்திட்டம் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு, அதாவது திசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை மட்டும் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூட எதுவும் வெளியிடப்படவில்லை. திசம்பர் மாதத்திற்கு இத்திட்டம் நீட்டிக்கப்படாததால் தான், நியாயவிலைக்கடைகளில் பருப்பு வகைகளும், பாமாயிலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அத்துறையின் அமைச்சர் காமராஜ்,‘‘உலகம் போற்றும் உன்னத திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டமும் தொடரும், இத்திட்டத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கூடுதல் பயன்களுடன் உணவு பாதுகாப்பு சட்டமும் செயல்படுத்தப்படும்’’ என்றார். ஆனால், பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் வழங்குவதற்கான சிறப்பு பொதுவினியோகத் திட்டம் குறித்து அமைச்சர் எந்தக் கருத்தும் தெரிவிக்காதது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தை ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்களை வழங்கும் திட்டமாக மட்டும் பார்க்க முடியாது. வெளிச்சந்தையில் பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு இத்திட்டமும் ஒரு காரணமாகும். இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டால், வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயரும் ஆபத்து உள்ளது.

நிதிப்பற்றாக்குறை காரணமாகத் தான் சிறப்பு பொதுவினியோகத்திட்டம் கைவிடப்படுகிறது என்று அரசு கூறுமானால், அதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. பொது வினியோகத் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.5101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் பெருமளவில் முறைகேடு செய்யப்படுகிறது. பொதுவினியோகத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்தாலே, அதன்மூலம் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தை இன்னும் விரிவாக செயல்படுத்த முடியும். பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசியை கடத்திச் சென்று விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிச்சந்தையில் சர்க்கரை விலை கிலோ.ரூ.50 என்ற அளவை எட்டியிருப்பதால் நியாயவிலைக்கடை சர்க்கரையும் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு பொதுவினியோகத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளது என்பதால், அத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பருப்பு வகைகளும், பாமாயிலும் வரும் 1-ஆம் தேதி முதல் தடையின்றி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x