Published : 27 Feb 2015 02:22 PM
Last Updated : 27 Feb 2015 02:22 PM

நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரை போராட்டம்

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். 'சொல்லொண்ணாத் துயரம்' என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்.

மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014-ல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார். அதன் பின் இன்று வரை நான் அவரைக் காணவில்லை. என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார். அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார். ஆதன் ஊடாக நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை.எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமை / தமிழ்த் தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும் அடங்கியிருந்ததுவே..!

2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

ஆனால் இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம்.

'தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.'

ஊரறிந்த தமிழ்க் கவிஞராகிய எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? இதன் பின்னணி என்ன?

தியாகு வீட்டை விட்டு ஓட, சொல்லிக் கொள்ளும் காரணம் 'புரட்சிகர அரசியலுக்கு என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன், அதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது' என்பதுதான்.

அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.

தியாகு 2001-ல் என்னைப் பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். என்னைப் போலவே தாமரையையும் அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்' என்று உறுதி கூறியே என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

இணைவதற்கு அனுமதி வாங்கிய தியாகு, வீட்டை விட்டு ஓடுவதற்கு இவர்களிடமெல்லாம் அனுமதி வாங்கினாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் முன் வந்து இதற்குப் பதில் சொல்ல வேண்டுகிறேன். அந்தப் பதிலினூடாக 'தமிழ்த் தேசியம்' என்றால் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, நாளை இவர்கள் அமைக்கப் போகிற தமிழ்த்தேசத்தில் என்னவகையான விழுமியங்கள் இடம் பெறப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்.

என்னுடைய கோரிக்கைகள்:

1. வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.

2. நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.

நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.

எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

எனக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத் தியாகுவே பொறுப்பு.

நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x